ஆகஸ்டு,17-
கடந்த 1977- ஆம் ஆண்டு இந்திரா காந்தியை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் உருவாக்கப்பட்ட ஜனதா கட்சி,அப்போது நடைபெற்ற மக்களவை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது.அந்த தேர்தலில் இந்திராவும், அவர் மகன் சஞ்சய் காந்தியும் தோற்கடிக்கப்பட்டனர்.
மூன்றே ஆண்டுகளில் ஜனதா கட்சி துண்டு துண்டாக சிதறியது. அடுத்த தேர்தலில் வென்று மீண்டும் இந்திரா பிரதமர் ஆனார். இப்போது, மோடியை வீழ்த்துவதற்காக 26 எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு ‘இந்தியா’எனும் பெயரில் புதிய கூட்டணியை வடிவமைத்துள்ளன.மக்களவை தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் உள்ள நிலையில், இந்தியா அணியில் இப்போதே முட்டல்-மோதல்கள் ஆரம்பித்துள்ளன.
46 ஆண்டுகளுக்கு முன்னர் ஜனதா எனும் பெயரில் உருவான அணி, தேர்தலை ஒற்றுமையாக சந்தித்து 3 ஆண்டுகள் நாட்டை ஆண்டு, அதன் பின்னரே உடைந்தது. இந்தியா அணியோ உருவான இரு வாரத்திலேயே , தடம் புரள ஆரம்பித்துள்ளது.
இந்தியா அணியில் மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரினாமூல் காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது. அதே அணியில்
இடம் பெற்றுள்ள இன்னொரு கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி’’ மக்களவை தேர்தலில் மே.வங்கத்தில் நாங்கள் தனித்து நிற்போம்’ என அறிவித்து விட்டது.
கொல்கத்தாவில் ஆரம்பித்த மோதல் டெல்லி வரை இப்போது நீண்டுள்ளது. டெல்லியில் ஆளும் கட்சியாக உள்ள ஆம் ஆத்மி, இந்தியா அணியில் உள்ளது. அதே அணியின் பிரதான கட்சியானகாங்கிரஸ், டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது. இரண்டாம் நிலை தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்படவில்லை.அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி ஆகியோர் முன்னிலையில் டெல்லி காங்கிரஸ் கட்சியின் 40 மூத்ததலைவர்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில்தான், தனித்துநிற்பது என அதிரடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த மக்களவை தேர்தலில் டெல்லியில் மொத்தமுள்ள 7 இடங்களையும் பாஜக அள்ளியது .ஆம் ஆத்மியுடன் இணைந்து காங்கிரஸ் போட்டியிட்டால், ஓரிரு இடங்களில் வெல்ல முடியும் என்று கருதப்பட்ட நிலையில் , காங்கிரஸ்கட்சியின் இந்த முடிவு ‘இந்தியா’ அணி தலைவர்களின் தூக்கத்தை தொலைத்துள்ளது.
மராட்டியத்திலோ நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தம்மை விட்டு பிரிந்து சென்று பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்ட அஜித் பவாரை கடந்த சனிக்கிழமை ரகசியமாக சந்திப்பேசி பரபரப்பை ஏற்படு்த்தி இருக்கிறார். இதனால் சரத்பவார் விரைவில் பாரதீய ஜனதா கூட்டணிக்கு சென்று விடக்கூடும் என்ற தகவல்கள் மும்பையை அதிர வைத்துக் கொண்டு இருக்கிறது. அஜித் பவாரை சந்தித்தது குடும்ப பிரச்சினை ஒன்று தொடர்பாக பேசுவதற்காகத்தான், பாரதீய ஜனதா கூட்டணியில் ஒரு போதும் சேரப்போவதில்லை என்று சரத்பவார் பூசி மெழுகி உள்ளார்.
இன்னும் என்னென்ன கூத்துக்கள் நடக்கப்போகிறதோ?
000