ஆகஸ்டு,07-
நான்கு திசைகளிலும் அடர்ந்திருக்கும் எதிர்க்கட்சிகளை உள்ளடக்கி ‘இந்தியா’ கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு திசையிலும் ஒவ்வொரு கூட்டத்தை நடத்த முடிவு எடுக்கப்பட்டது.
முதல் கூட்டம் கிழக்கு திசையில் உள்ள பாட்னாவில் நடந்தது. இரண்டாம் கூட்டம் தெற்கு திசையில் உள்ள பெங்களூருவில் நடத்தப்பட்டது. மேற்கு கரையில் உள்ள மும்பையில் மூன்றாவது ஆலோசனை கூட்டம் வரும் 31- ஆம் தேதி தொடங்கி இரண்டு நாட்கள் நடக்க உள்ளது.
சிவசேனா ( பாலாசாகேப் உத்தவ் தாக்கரே அணி) தலைவர் உத்தவ் தாக்கரே இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். ’இந்தியா’கூட்டணியின் தலைவராக சோனியாவும் ஒருங்கிணைப்பாளராக நிதிஷ்குமாரும் இந்த கூட்டத்தில் தேர்வு செய்யப்படுவார்கள் என செய்திகள் வெளியாகி உள்ளன.
அடுத்த (நான்காம்) கூட்டத்தை சென்னையில் நடத்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் விரும்புகிறார் மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவிலும், கேரள முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்திலும் நான்காம் ஆலோசனை கூட்டத்தை நடத்த ஆசைப்படுகிறார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியின் எண்ணம் வேறு மாதிரி உள்ளது.
‘’ கிழக்கு, தெற்கு பகுதியில் கூட்டம் நடந்தாயிற்று. மேற்கே நடக்கப்போகிறது. எனவே நியாயப்படி நான்காம் கூட்டத்தை வடக்கு திசையில்தான் நடத்த வேண்டும். வடக்கில் உள்ள இமாச்சலபிரதேச மாநிலம் சிம்லாவில் அடுத்த கூட்டம் நடப்பதே முறையானது’’ என்கிறது, காங்கிரஸ்.
காங்கிரஸ் கட்சியின் வாதத்தில் உண்மை இருப்பதால் சிம்லாவில் தான் அடுத்த கூட்டம் இருக்கும். அந்த மாநிலத்தில் காங்கிரஸ்,ஆளும் கட்சியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
000