இந்திய பொருளாதாரத்தி்ன் சிற்பி மன்மோகன் சிங்.

டிசம்பர்-27.
இந்திய பொருளாதாரத்தை நவீன காலத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்த சிற்பி என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

அவர் 1932 – ஆம் ஆண்டு செப்டம்பர் 26 அன்று, பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்தார். தண்ணீர், மின்சாரம் உள்பட அடிப்படை வசதிகளற்ற கிராமம் அது.

பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் பயின்ற பிறகு கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டமும், பின்னர் ஆக்ஸ்போர்டில் டிஃபில் பட்டமும் பெற்றார்.

கேம்பிரிட்ஜில் படிக்கும்போது, போதிய பணம் இல்லாமல் தவித்தார். அவரது மகள் தமன் சிங், தனது தந்தை பற்றி ஒரு புத்தகத்தில் இது குறித்து எழுதியுள்ளார்.

“அவரது கல்வி மற்றும் வாழ்க்கைச் செலவுகள் ஆண்டுக்கு 60 ஆயிரம் ரூபாயாக இருந்தது. பஞ்சாப் பல்கலைக் கழகம் அவருக்கு உதவித்தொகையாக ரூ.15,266 வழங்கியது.

மீதமுள்ள செலவுகளுக்கு அவர் தனது தந்தையைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. இதனால் மன்மோகன் மிகவும் சிக்கனமாக வாழ்ந்தார். உணவு விடுதியில் மலிவாக கிடைத்த சாப்பாட்டை சாப்பிட்டுப் பழகிக் கொண்டார்” என்று அப்பாவை பற்றி மகள் எழுதி இருக்கிறார்.

இவ்வளவு கடினமான சூழலில் படித்த மன்மோகன் சிங் 1991-ஆம் ஆண்டில் இந்தியாவின் நிதியமைச்சர் என்ற உயரிய பதவியைப் பெற்றார். அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்று நாழு முழுவதும் அறியப்பட்டவராக உருவெடுத்தார்.

அவர் பதவியேற்ற போது அந்நியச் செலவாணி குறைந்து இந்தியா திவாலாகிக் கொண்டிருந்தது. அவர் தனது முதல் உரையில் விக்டர் ஹ்யூகோவை மேற்கோள் காட்டி, “ஒருவருக்கான காலம் கைகூடினால், பூமியில் எந்த சக்தியும் அவரின் சிந்தனைகளை நிறுத்த முடியாது” என்று கூறினார். இதை மன்மோகன் சிங் தமது செயலில் காட்டினார்.

அமைச்சராகப் பதவி ஏற்ற உடன் வரிகளைக் குறைத்தார், ரூபாயின் மதிப்பை தளர்த்தினார். மத்திய அரசு அதிகாரிகள் சுரண்டியதால் நட்டத்தில் தத்தளித்த நிறுவனங்களை தனியாரிடம் கொடுத்தார். வெளிநாடுகள் ,இந்தியாவில் முதலீடு செய்வதற்கு ஏற்ப கொள்கையை மாற்றி அமைத்தார்.

அவர் திறந்து விட்ட கதவுகளால் சென்னையில் ஹுண்டாய், போர்டு மற்றும் நிசான்- ரொணால்டு போன்ற நிறுவனங்கள் ஆலைகளைத் திறந்தன. மற்ற மாநிலங்களில் டொயோட்டா. ஹோண்டா போன்ற நிறுவனங்கள் கார்களை உற்பத்தி செய்தன.

காலம் காலமாக கோலோச்சிக் கொண்டிருந்த அம்பாசிட்டர், பியட் போன்ற கார்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு நவீன கார்கள் இந்திய சாலைகளில் வலம் வரத் தொடங்கின. இரு சக்கர வாகனங்கள் உற்பத்தியில் பெரும் மாற்றம் ஏற்பட்டது.விமானப் போக்குவரத்தில் தனியார் நிறுவனங்கள் கால் பதித்ததால் அனைவரும் விமானங்களில் பயணம் செய்வது சாத்தியமானது.

இந்தியாவின் பொருளாதாரம் புத்துயிர் பெற்றது, தொழில்துறை உயர்ந்தது, பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டது. வளர்ச்சி விகிதங்கள் தொடர்ந்து உயர்ந்தன.

இவ்வளவுப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய மன்மோகன் சிங்குக்கு எந்த அரசியல் பின்புலமும் இல்லை. அவருடைய குடும்பத்தில் யாரும் அரசியலில் இருந்ததும் கிடையாது.அவருக்கும் அரசியல் மீது ஆசை இலலை.
அவர் ஒரு முறை”ஒரு அரசியல்வாதியாக இருப்பது நல்லது, ஆனால் ஜனநாயகத்தில் ஒரு அரசியல்வாதியாக இருக்க ஒருவர் முதலில் தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும்” என்று கூறினார்.

அவர் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கடந்த 1999- ஆம் ஆண்டு போட்டியிட்ட போது தோற்கடிக்கப்பட்டார். பிறகு காங்கிரஸ் கட்சி அவரை மாநிலங்கவைக்கு தேர்வு செய்து அனுப்பியது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, 2004- ஆம் ஆண்டில் பிரதமர் பதவியை ஏற்க முடியாத போது மன்மோகன் சிங் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

இருப்பினும், மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது சோனியா காந்தி உண்மையான அதிகார மையமாக இருந்ததாகவும், அவர் ஒருபோதும் உண்மையான பொறுப்பில் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
பிரதமராக பதவி ஏற்ற உடன், அமெரிக்க அணுசக்தி தொழில் நுட்பத்தை இந்தியா அணுகுவதற்கான ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதனால் அணுசக்தி விவகாரத்தில் இந்தியா தனிமைப் படுத்தப்பட்டு இருந்த நிலைமை மாறியது.

அறிவார்ந்த கல்வியாளரான அவர் ஆடம்பரங்களையும் விளம்பரங்களையும் விரும்பாதவர். தன்னடக்கமான மனிதராகவே அறியப்பட்டவர். இதனால் அவருடைய டுவிட்டர் கணக்குகளை பின்பற்றுகிறவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

குறைவாகவே பேசக்கூடிய, அமைதியான மனிதராக இருந்தபோதிலும், அவர் பல கோடி மக்களின் விருப்பத்துக்கு உரியவராக திகழ்ந்தார்.

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உரிமங்களை சட்டவிரோதமாக ஒதுக்கியது தொடர்பான நிலக்கரி ஊழல் குறித்த கேள்விகளுக்குப் நேரடியாக பதிலளிக்காமல் மௌனம் காத்த போது அவர் மிகவும் விமர்சனத்திற்கு ஆளானார். அலைக் கற்றை ஒதுக்கீடு ஊழல், காமென் விளையாட்டுப் போட்டி ஊழல் போன்றவற்றை தடுக்க வில்லை என்பதும் அவர் மீதான குற்றச்சாட்டாகும்.

விமர்சனங்களை தாண்டி மன்மோகன் சிங் இந்தியாவை பொருளாதாரம் மற்றும் அணுசக்தி தனிமைப்படுத்தலில் இருந்து வெளியே கொண்டு வந்ததற்காக காலம் முழுவதும் போற்றப்படுவார்.

அரசியல் பின்புலம் இல்லாமல் கல்வியால் ஒருவர் உயர்ந்த பதவிக்கு வரமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு மன்மோகன் சிங்.
*

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *