ஜனவரி-02.
‘விசுவரூபம் ‘ படத்துக்கு பிரச்சினை வந்த சமயத்தில் ‘இந்தியாவை விட்டே வெளியேறப்போகிறேன்’ என விரக்தியில் சொன்னார், ‘உலகநாயகன்’ கமல்ஹாசன்.
அது போன்றதொரு மனநிலையில்,இருக்கிறார், அனுராக் கஷ்யப்.
இவர்கள் இருவருக்குமே சில ஒற்றுமைகள் உண்டு. கமல் போலவே அனுராக்கும் பன்முகத் திறமையாளர்.
நடிகர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், டைரக்டர் என பல அவதாரங்கள் எடுத்த அனுராக், தன்னை உருவாக்கிய இந்தி சினிமா மீது கடும் ஆத்திரத்தில் இருக்கிறார். இத்தனைக்கும் இந்தி சினிமாதான் அவருக்கு தேசிய விருதுகளை பெற்றுத்தந்தது.
‘லியோ’ உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ள அவர், கடந்த ஆண்டில் தமிழில் `மகாராஜா’, `விடுதலை 2′ , ஆகிய படங்களில் ‘ஸ்கோர் ‘ செய்தார்.
மலையாளத்தில் அவர் நடித்த `ரைஃபிள் க்ளப்’ படமும் அனுராக்கின் பெயரை சொல்லியது.
அண்மையில் அவர் , ஹாலிவுட் ரிப்போர்ட்டர்’ என்ற இதழில், மனம் திறந்து பல விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். அந்த பேட்டியில் ‘பாலிவுட்’ சினிமாவை , துவைத்து எடுத்து விட்டார்.
‘இந்தியில்,ஒரு படத்தை தொடங்குவதற்கு முன்பே, அந்த திரைப்படத்தை எப்படி வியாபாரம் செய்வது என்பதில்தான் கவனம் செலுத்துகிறார்கள் – இது திரைப்படங்களை இயக்கும்போது கிடைக்கிற மகிழ்ச்சியை உறிஞ்சி எடுக்கிறது’என சலித்துக்கொண்டார்.
‘மஞ்சுமல் பாய்ஸ்’போன்ற படங்களை இந்தியில் கொடுக்க முடியாது.இங்குள்ள தயாரிப்பாளர்கள் அதற்கு தயாராக இல்லை-ஆனால் அதனை ‘ரீ- மேக்’ செய்வார்கள்- வேற்று மொழிகளில் வெற்றி பெறும் படங்களை ‘ரீ மேக் ‘ செய்வதில் தான் கவனம் செலுத்துகிறார்கள்.’என்று வருத்தப்பட்டார்.
முத்தாய்ப்பாக,, ‘இந்தி பட தயாரிப்புகள் மீது எனக்கு ஏற்பட்டுள்ள வெறுப்பால், இந்த ஆண்டே நான் மும்பைக்கு ‘குட் பை ‘ சொல்லி விட்டு, தென்னிந்தியாவுக்கு செல்லப்போகிறேன்’ எனச்சொல்லி இந்தி திரை உலகை அதிர வைத்துள்ளார்.
பாலிவுட் குறித்த அவரின் கருத்து, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது,
*