May 17,2023
வாட்ஸ் ஆப் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதியை சென்னை மெட்ரோ அறிமுகம் செய்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பல்வேறு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. முதலில் இந்த மெட்ரோ ரயில் சேவைக்கு பொதுமக்கள் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் தற்போது மக்களின் முதன்மையான போக்குவரத்து முறைகளில் ஒன்றாக மெட்ரோ ரயில் சேவை மாறி வருகிறது. இதனால் சென்னை மெட்ரோ நிறுவனம் தனது சேவையை விரிவுபடுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது. சென்னையில் அலுவலகம் செல்வோர், கல்லூரி மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் என நாளொன்றுக்கு லட்சத்துக்கும் அதிகமானோர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். நாளுக்கு நாள் மெட்ரோ ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சென்னை மெட்ரோ நிறுவனம், பயணிகளை ஈர்க்கும் வகையில் பயணிகள் அட்டை திட்டம் மூலம் டிக்கெட் பெற்றால் 20% சலுகை, மாதப் பயணச்சீட்டு ரூ.2,500, மற்றும் 20-க்கு மேற்பட்டோர் பயணித்தால் குரூப் டிக்கெட் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிலையில் வாட்ஸ் ஆப் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதியை மெட்ரோ நிறுவனம் இன்று சென்னை திருமங்கலம் மெட்ரோ நிலையத்தில் அறிமுகம் செய்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் இதுகுறித்து பேசிய போது “ மெட்ரோ ரயில் நிலையங்களில் வாட்ஸ் ஆப் எண் மற்றும் கியுஆர் கோடு வைக்கப்பட்டுள்ளது. அந்த எண்ணுக்கு புறப்படும் இடம் மற்றும் சேருமிடத்தை பயணிகள் அனுப்பினால், பின் பணம் செலுத்தும் பக்கத்திற்கு செல்லும். பயணிகள் யுபிஐ சேவை போன்ற பல வழிகளில் பணம் செலுத்தலாம். பின்னர் பயண டிக்கெட் கியுஆர் கோடாக வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அனுப்பப்படும், அதை பயன்படுத்தி பயணித்துக் கொள்ளலாம்” என்று தெரிவித்தனர்.
மேலும் கைபேசி மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட்டுகள் பதிவு செய்தால் 20% தள்ளுபடி அளிக்கப்படும் எனவும் மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.