மே.29
தமிழகத்தில் கடந்த 4ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் இன்றுடன் விடைபெறுகிறது. கடந்த 25 நாட்களாக வாட்டி வதைத்து வந்த வெயிலிலிருந்து விடுதலை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.
தமிழகத்தில் கத்திரி வெயில் என்றழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. இதற்கு முன்பாகவே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், அக்னி நட்சத்திரம் தொடங்கியதும் அதன் உக்கிரம் மேலும் அதிகரித்தது. இருப்பினும், தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெப்பச்சலனம் உள்ளிட்ட காரணங்களால் பரவலாக மழையும் பெய்ததால், வெயிலின் பாதிப்பிலிருந்து மக்கள் ஓரளவு தப்பிக்க முடிந்தது.
இருந்தபோதும், வேலூர், திருத்தணி, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் பல நாட்கள் வெயில் 100 டிகிரியைத் தாண்டி சுட்டெரித்ததால் மக்கள் செய்வதறியாது தவித்துவந்தனர். இந்த நிலையில், மக்களை வாட்டி வதைத்துவந்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைகிறது.
அக்னி நட்சத்திரம் இன்றுடன் விடைபெற்றாலும், தமிழகத்தின் சில இடங்களில் இன்னும் ஒரு வார காலத்துக்கு வெயிலின் தாக்கம் இயல்பைவிட சற்று அதிகமாகவே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்றும் (மே.29) நாளை(மே.30)யும் ஓரிரு இடங்களில் வெயில் 100 டிகிரி முதல் 104 டிகிரி வரை பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.