ஜனவரி -09,
சினிமாவில், தனக்கு முன்னால் இருந்த சீனியர் ஆட்களை எல்லாம், கீழே தள்ளி உச்சநிலையை எட்டியவர் ‘இளையதளபதி’ விஜய்.சம்பளத்தில் ரஜினியை நெருங்கியவர், ஜனங்கள் மனதிலும், சூப்பர்ஸ்டார் போலவே ஆழமாக இடம் பிடித்தார்.
அந்த மயக்கம்தான் அவரை அரசியலுக்கு இழுத்து வந்தது.தமிழக வெற்றிக்கழகம் எனும் கட்சியை ஆரம்பித்தவர், குறுகிய கால அவகாசத்தில் விக்கிரவாண்டியில் , கட்சி மாநாட்டை நடத்தி, பெரிய கட்சிகளுக்கு கிலியை ஏற்படுத்தினார்.
அங்கு திரண்ட கூட்டத்தை பார்த்து பிரமித்தவர், அடுத்த கட்டத்துக்கு கட்சியை எடுத்து சென்றிருக்க வேண்டும்.கட்சிக்கு இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்கி, மாவட்டங்களுக்கு பொருத்தமான செயலாளர்களை நியமித்து, இந்த நேரம் ,தமிழகத்தில் சின்ன ரவுண்டாவது வந்திருக்க வேண்டும்.
சினிமாவில் இருந்து வந்த எம்.ஜி.ஆர்., அதிமுக என்ற கட்சியை, ஆரம்பித்ததும் அதைத்தான் செய்தார்.முதல் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் முன்பே, கிராமங்கள் தோறும் , கடசிக்கிளைகளை ஏற்படுத்தினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மட்டும் கூட்டணியில் சேர்த்துக்கொண்டு, திமுக, காங்கிரஸ், ஜனதா ஆகிய கட்சிகளை ஒரே நேரத்தில் முறியடிக்க, எம்.ஜி.ஆரின் கவர்ச்சி மட்டுமல்லாமல், கட்சியின் அடித்தளமும் வலிமையாக இருந்ததே அதற்கு காரணம்.
விஜய் என்ன செய்கிறார் ?
ஆனால் அடுத்த முதல் –அமைச்சர் கனவில் மிதக்கும் விஜய் என்ன
செய்கிறார் ?
விக்கிரவாண்டி மாநாடு முடிந்த கையோடு, பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் கூண்டுக்கிளியாக முடங்கி கொண்டார்.மாநாடு முடிந்ததும் , அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.
அதன்பின் அவர் வெளியே தென்படவே இல்லை.
இறந்த தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாளுக்கு பனையூரில் உள்ள அவரது அலுவலகத்தில் போட்டோக்களுக்கு மாலை போட்டு, ஊடகங்களுக்கு கொடுப்பதோடு சரி. தினமும் ஒரு அறிக்கை விடுவதோடு , தலைவர் பணியை செம்மையாக செய்வதாக நினைப்பு.
அவரை நம்பி , அவரோடு சென்றுள்ள ரசிகர் மன்றத்து ஆட்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.மேல் மட்டத்தில் இருக்கும் மூவர், விஜய் உள்ளிட்ட மொத்த கட்சியையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக, புலம்பித் தீர்க்கின்றனர் ,பழைய மன்றத்தினர்.
யார் அந்த மூவர் ?
ஓருவர் -மாநில அளவில் முக்கியஸ்தராக இருக்கும் முன்னாள் மக்கள் பிரதிநிதி. இன்னொருவர் , விஜய்க்கு வியூகம் வகுத்துக் கொடுக்கும் நபர்.
மூன்றாவது பேர்வழி -வருமான வரித்துறையில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஐ.ஆர்.எஸ்., அதிகாரி.
இவர்கள் மூவரும் என்ன நினைக்கின்றனரோ, அதை மட்டுமே விஜயால் செயல்படுத்த முடிகிறது.
மூவரையும் கடந்து, வெளியாட்கள் யாருமே விஜயை சந்திக்க முடியவில்லை. கடவுளிடம் முறையிட, நந்தி மறைப்பது போல், விஜயை தரிசிக்க, மனம் திறந்து பேச, இந்த மூன்று நந்திகள் குறுக்காக நிற்கிறார்கள், என பொருமுகிறது, தவெக வட்டாரம்.
இதனால், தி.மு.க., – அ.தி.மு.க., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளில் அதிருப்தியில் இருக்கும் முக்கிய தலைவர்கள், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முயற்சித்தும் முடியாத நிலை உள்ளது’
காரணம் – மூவர் அணியை தாண்டி விஜயை நெருங்க முடியாத சூழல்.
விஜய் வெளியே வருவாரா?
*