ஜனவரி-24.
தமிழ்நாட்டை கடந்த இரண்டு ஆண்டுகளாக உலுக்கிக் கொண்டிருந்த வேங்கை வயல் வழக்கில் மூன்று பேர் குற்றவாளிகள் என்று சிபிசிஐடி பிரிவு போலீசார் அடையாளம் கண்டு அதனை நீதிமன்றத்திலும் தெரிவித்து உள்ளனர்.
ஒன்றிரண்டைத் தவிர பெரும்பாலான குற்றங்களில் வெகுவிரைவாக குற்றவாளிகளை நெருங்கிவிடும் தமிழக காவல் துறைக்கு பெரும் சவாலாக இருந்ததுதான் வேங்கை வயல் வழக்கு. திருச்சியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலையில் இடது புறம் உள்ள முத்துக்காடு ஊராட்சிக்கு உட்பட்டதுதான் வேங்கைவயல் கிராமம். இங்கு பட்டியல் இனத்தவர்கள் மட்டும் வசிக்கின்றனர். இவர்களுக்குகுடிநீர் வழங்கும் மேல்நிலை குடிநீர் தொட்டியில் கடந்த 2022-ஆம் ஆண்டு இறுதியில் மலம் கலந்திருந்ததான் வழக்கு.
இந்த ஊரில் வசிக்கும் சதாசிவம் என்பவரின் பேரன் கோமித்ரனுக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது இதன் பிறகு மேலும் சில குழந்தைகளும் பாதிக்கப்பட்டனர், மருத்துவப் பரிசோதனையில் குடிநீரில் கிருமிகள் கலந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. உடனே மேல் நிலை குடிநீர் தொட்டியை ஏறிப்பார்த்ததில் அதனுள் மலத்தைக் கொட்டியிருப்பது தெரியவந்தது.
பிறகு மாவட்ட ஆட்சித்தலைவா் உட்பட அனைத்து அதிகாரிகளும் வேங்கைவயலுக்கு வந்து விசாரணை மேற்கொண்டும் துப்புத் துலங்கவில்லை. வழக்கு உள்ளூர் போலீசாரிடம் இருந்து சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டும் முன்னேற்றம் கிடையாது.
எதிர்க்கட்சிகளும் சமூக அமைப்புகளும் தமிழக போலீசை வறுத்தெடுத்தார்கள். மேலும் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி மனுத்தாக்கல் செய்ப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி சத்தியநராயணா தலைமையில் ஒரு நபர் குழுவை அமைத்தது.
இந்த நிலையில் வேங்கை வயல் வழக்கில் சிபிசிஐடி போலீசார் உயர்நீதிமன்றத்தில் இன்று அறிக்கை தாக்கல் செய்து உள்ளனர்
இதில் “அதே முத்துக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட முரளி ராஜா, சுதர்சன், முத்துக் கிருஷ்ணன் ஆகிய மூவருந்தான் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டு உள்ளது.
ஊராட்சி மன்றத் தலைவியின் கணவர் முத்தையா என்பவரை சிக்கலில மாட்டிவிடுவதற்காக இந்த கொடிய செயலை மூன்று பேரும் செய்து உள்ளனர். இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உளள்து” என்று சிபிசிஐடி போலீஸ் தரப்பு அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது.
தமிழ்நாட்டையே உலுக்கிக் கொண்டிருந்த வழக்கு ஒன்றில் துப்புத் துலங்கி இருப்பது அரசுக்கும் காவல் துறைக்கும் பெரும் நிம்மதியை ஏற்படுத்தி இருப்பது என்னவோ உண்மைதான்.
*