மே.26
இந்தியாவில் 3 ஆயிரம் மருந்து தயாரிப்பு நிறுவனங்களும், 10500 மருந்து உற்பத்தி கூடங்களும் செயல்பட்டுவருகின்றன. இவற்றின் மூலம் தரமான, விலை மலிவான மருந்துகள் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.அந்த வகையில், மருந்து உற்பத்தியில் இந்தியா உலக அளவில் 3-வது இடத்தில் இருந்துவருகிறது.
உலகளாவிய தடுப்பூசி தேவையில் 50 சதவீதத்தை இந்தியா தான் பூர்த்தி செய்து வருகிறது. இதற்கிடையே, கடந்த ஆண்டு காம்பியாவில் இருமல் மருந்து குடித்த 66 குழந்தைகளும், உஸ்பெகிஸ்தான் நாட்டில் 18 குழந்தைகளும் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளே காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், மாநிலங்களின் மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும், மத்திய ஆய்வுக்கூடங்களுக்கும் மத்திய அரசின் இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அதிகாரி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், இந்திய இருமல் மருந்துகளை ஏற்றுமதி செய்ய பரிசோதனை கட்டாயம். இருமல் மருந்து கம்பெனிகளிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை உயர் முன்னுரிமை அளித்து பரிசோதனை செய்யுமாறும், விரைவிலேயே பரிசோதனை அறிக்கையை அளிக்குமாறும் மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற ஆய்வுக்கூடங்களுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.