இலங்கை, நியூசிலாந்து அணிகள் இடையாயன 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில், 3வது மற்றும் கடைசிப் போட்டி வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது.
இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதையடுத்து 2 ஆவது டி20 கிரிக்கெட் போட்டி டியூன்டின் நகரில் நேற்று நடைபெற்றது.
அதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. இதையடுத்து, இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிசாங்கா, குசால் மென்டிஸ் ஆகியோர் களமிறங்கினர். அதில், நிசாங்கா 9 ரன்னும், மெண்டிஸ் 10 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதையடுத்து, இணைந்த குசால் பெரோ – தனஞ்செய டி சில்வா ஜோடி, நின்று விளையாடி ரன்களை எடுத்தது. பெரோ 35 ரன்னும் சில்வா 37 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கயி அசலங்கா 24 ரன்கள் எடுக்க மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் அவுட்ஆகி வெளியேறினர். 19 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி 141 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதையடுத்து 142 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணி 14.4 ஓவரிலேயே வெற்றியை தன்வசமாக்கியது. அதன்படி, இலங்கை அணிக்கு எதிரான 2 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. இந்த இரு அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.