சென்னை, ஜுன் 17, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்டு உள்ளது. குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள அவர் அமைச்சராக நீடிக்க ஆளுநர் ஒப்புதல் தர மறுத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
அவர் வகித்து வந்த மின்சாரத் துறையை கூடுதலாக அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும் கலால் ஆயத் தீர்வையை கூடுதலாக அமைச்சர் முத்துசாமி கவனிப்பதற்கும் ஆளுநர் ரவி ஒப்புதல் கொடுத்து இருந்தார். ஆனால் எந்த துறையும் இல்லாமல் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க ஆளுநர் ஒப்புதல் தர மறுத்துவிட்டார். இதனால் அவரை இலாகா இல்லாத அமைச்சராக வைத்துக் கொள்வதற்கு சிறப்பு அரசாணை ஒன்றை முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது.
மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆளுநர் ரவி என்ன எதிர்வினை ஆற்றுவார் என்பதை அறிய அனைவரும் ஆர்வமாக உள்ளனர். எனவே இதில் வெல்லப் போவது திமுக அரசா அல்லது ஆளுநர் ரவியா என்ற கேள்வி எழுந்து உள்ளது.
அமலாக்க துறையால் கடந்த புதன் கிழமை விடியற் காலை கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்குவதற்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால் சிறைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அவர், பை பாஸ் சிகிச்சைக்காக சென்னை காவேரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். ஓரிரு நாளில் அங்கு செந்திலுக்கு அறுவை சிகிச்சை நடை பெற உள்ளது.
இந்த பரபரப்புகளுக்கு இடையே செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அவர்களின் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு சென்னை முதன்மை நீதிமன்றம் அனுமதி கொடுத்து உள்ளது. அமலாக்கத் துறை 15 நாள் கேட்டு மனு செய்திருந்தது. இதனை விசாரித்த நீதிபதி அல்லி எட்டு நாட்கள் மட்டும் கொடுத்து உள்ளார். விசாரணை மருத்துவமனையில் வைத்து நடைபெற வேண்டும், அவரை துன்புறுத்தக் கூடாது என்பது முக்கியமான நிபந்தனைகள் ஆகும்.
இதே வேளையில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார், உதவியாளர் சண்முகம் ஆகியோரை விசாரணைக்கு வருமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது. அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் மேலும் பல ஆதராங்களை திரட்ட முடியும் என்பது அமலாக்கத்துறை நம்பிக்கை ஆகும்.
மோசடிப் புகாருக்கு ஆளாகி உள்ள செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்த நீக்க வேண்டும் என்று அதிமுகவும் பாரதீய ஜனதாவும் வலியுறுத்தி வருகின்றன. அவருக்கு எதிராக புதன் கிழமை ஆளுநர் ரவியிடம் மனு கொடுத்த அதிமுக பதவி நீக்கத்தை வலியுறுத்தி 21- ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்து உள்ளது.
ஆனால் ஆளும் திமுக ஆதரவாளர்கள், குற்ற வழக்குகளில் தொடர்பு உடையவர்கள் அமைச்சர் பதவியில் நீடித்ததற்கான பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டு வருகின்றனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூட சொத்துக் குவிப்பு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த போது பதவியில் நீடித்ததை சுட்டிக் காட்டி இருக்கின்றனர். இப்போது உள்ள மத்திய அமைச்சர்களில் சுமார் 30 பேர் மீது வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதில் என்ன தவறு என்பதும் திமுக ஆதரவாளர்கள் எழுப்பும் கேள்வியாகும்.
நிலைமை இப்படி இருக்க மாநில அரசுக்கு வேண்டும் என்றே ஆளுநர் நெருக்கடி கொடுதப்பது சட்ட விரோதம் என்ற கருத்து வளைதளங்களில் பரவி வருகிறது.
000