ஏப்ரல்.20
எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப்படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு இந்த ஆண்டு 20.87 லட்சம் மாணவ-மாணவியர் விண்ணப்பித்துள்ளனர். இதில், அதிகப்படியான விண்ணப்பங்கள் மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசத்திலிருந்து பெறப்பட்டுள்ளன.
தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள மாணவ-மாணவியர் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், பி.ஏ.எம்.எஸ், பி.எஸ்.எம்.எஸ், பி.யு.எம்.எஸ், பி.எச்.எம்.எஸ் மற்றும் பிஎஸ்.சி நர்சிங் படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 7ம் தேதி நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடத்தப்படவுள்ளது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கெடு முடிவடைந்த நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்களின் விவரங்களின் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு 20 லட்சத்து 87 மாணவ-மாணவியர் நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 2.75 லட்சம் பேர் அதிகமாகும்.
நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் கிட்டதட்ட 12 லட்சம் பேர் மாணவிகள், 9.02 பேர் மாணவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 2.80 லட்சம் பேருந்தும் உத்தரபிரதேசத்தில் 2.70 லட்சம் பேரும், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவ-மாணவியரும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
நீட் தேர்வுக்கான அனுமதிச்சீட்டுகள் தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பு மாணவ-மாணவியருக்கு வழங்கப்படும் என்றும் 11 மற்றும் 12ம் வகுப்பு பாடத்திட்டத்தின்படி நீட் தேர்வுக்காண வினாத்தாள்கள் இருக்கும் எனவும் தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது.