ஆகஸ்டு, 14-
‘அன்னக்கிளி’ படத்தில் வந்த தெங்குமராட்டா கிராமத்தில் வசிப்பவர்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு தேவையான நிதியை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு உடனடியாக ஒதுக்க வேண்டும் என்று
மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இந்த கிராமத்தில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நடக்கும் மோதல் அதிகரித்ததால், குத்தகைக்கு வழங்கப்பட்ட வனப்பகுதி நிலங்களை மீட்க வேண்டும் என்று தமிழக அரசின் முதன்மை தலைமை வனப் பாதுகாவலருக்கு, கோவை வனப் பாதுகாவலர் கடந்த 2011 -ஆம் ஆண்டில் பரிந்துரை செய்திருந்தார்.
இதையடுத்து தெங்குமராட்டாவில் வசிக்கும் 497 குடும்பங்களை வேறு இடத்திற்கு மாற்ற ரூ. 74.55 கோடி செலவாகும் என்று மதிப்பீடு செய்த தமிழக அரசு, அந்த பரிந்துரையை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு அனுப்பியிருந்தது.
இதற்கு ஆணையத்தில் போதிய நிதி இல்லை என்று மத்திய அரசு பதில் கொடுத்திருந்தது.
இந்த விளக்கத்தை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தெங்குமராட்டா கிராமத்தில் வசிப்பவர்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு தேவைப்படும் நிதி ஒதுக்குவது பற்றிய அறிக்கையை அக்டோபர் 10- ஆம் தேதி தாக்கல் செய்யவேண்டும் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அமர்வு உத்தரவிட்டு உள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் முதுமலை வனச்சரகத்திற்கு உட்பட்டது என்றாலும் கூட தெங்குமராட்டாவுக்கு ஈரோடு மாவட்டத்தின் சத்தியமங்கலம் அடுத்து உள்ள பவானி சாகர் வழியாகத்தான் சாலை தொடர்பு உள்ளது. வற்றாத ஆறான மோயாற்றின் கரையில் இந்த ஊர் காடுகளால் சூழப்பட்ட நிலப்பரப்பாகும். வாழை மற்றும் பாக்குத் தோட்டங்கள் நிறைந்த வனக்கிராமம்.
கீழ் கோத்தகிரியில் வசித்தவர்கள் விவசாயம் செய்து கொள்வதற்காக தெங்குமராட்டா வன நிலத்தை ஆங்கிலேய அரசு நூறு ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு கொடுத்திருந்தது. அந்த குத்தகை காலம் முடிவடைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதும் குறிப்பிடதக்கது.
கடந்த 1975 -76- ஆம் ஆண்டுகளில் போக்குவரத்து வசதி குறைவாக இருந்த காலகட்டத்தில் பஞ்சு அருணாசலம், அன்னக்கிளி படத்தை இங்கு படமாக்கினார்.
இசைஞானி இளையராஜாவை திரை உலகத்திற்கு அறிமுகம் செய்த படந்தான் அன்னக்கிளி.
ஊரைச் சுற்றி புலிகளும் யானைகளும் அதிகம். அடிக்கடி அவை ஊருக்குள் நுழைவதால் ஏற்படும் மோதலை தடுப்பதற்காக ஒட்டுமொத்த தெங்கு மராட்டாவையே வேறு இடத்திற்கு மாற்றிவிடுவது என்பது திட்டமாகும்.
000