ஜுலை,05- பாலஸ்தீனத்தில் மேற்குக் கரையில் உள்ள ஜெனின் என்ற நகரத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் மூன்றாவது நாளாக கடுமையான தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் திங்கட்கிழமை ஜெனின் நகரம் மீது மிகப்பெரிய அளவில் இஸ்ரேல் ராணுவம் வான் வழித் தாக்குதலை மேற்கொண்டது. குண்டு வீச்சுக்கு ஆளாகி 10 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும்16 முதல் 23 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெனின் நகரத்தில் பாலஸ்தீன அகதிகள் வசிக்கும் நெரிசலான பகுதியில் அமைந்துள்ள ஹமாஸ் இயக்கத்தின் தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் டிரோன் தாக்குதலும் நடத்தியது. அந்த நகரத்தில் தொடர்ந்து 3 – வது நாளாக இஸ்ரேல் ராணுவத்திற்கும், பாலஸ்தீன போராளிகளுக்கும் இரவு பகலாக துப்பாக்கிச் சண்டை நடந்துவருகிறது.
இதனிடையே இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவ் நகரில் கார் மோதியதில் 7 பேர் காயமடைந்தனர். இவர்களில் மூன்று பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது
வணிக வளாகம் ஒன்றுக்கு வெளியே நின்று கொண்டிருந்தவர்கள் மீது 20 வயது பாலஸ்தீனிய இளஞைர் ஒருவர் காரை வேகமாக ஓட்டி வந்து மோதி இந்த விபத்தை நிகழ்த்தி உள்ளார். உடனே காரில் இருந்து இறங்கிய அந்த இளைஞர் சுற்றியிருந்தவர்களைக் கத்தியால் குத்த முயன்றார். ஆனால் உடனடியாக அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று இஸ்ரேல் நாட்டு காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு பதிலடியாக டெல் அவிவ் நகரத்தில் “வீர” தாக்குதல் நடத்தப்பட்டதாக பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸ் தெரிவித்து உள்ளது.
ஜெனின் நகரத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கி உள்ளவர்களில் ஆயிரக்கணக்கானோர் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் வான் வழித் தாக்குதலுக்கு அஞ்சி வெளியேறி வருகின்றனர்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன குழுக்களுக்கும் இடையிலான மோதல் ஆரம்பமானது இன்று நேற்றல்ல. கடந்த 1948 ல் இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்ட போதே மோதல் ஆரம்பமாகி விட்டது. இங்கு அமைதியை உருவாக்க எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சியும் தோற்று விடுவதுதான் வேதனைக்கு உரியது.
000
000