மத்திய அமைச்சர் அமித் ஷா பொதுவெளியில் பேசியது தவறு என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இஸ்லாமியர் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து வரும் கருத்துகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் இஸ்லாமியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் வழங்கப்பட்டு வந்த 4 சதவீத தனி இட ஒதுக்கீட்டை ஆளும் மாநில பாஜக அரசு சமீபத்தில் ரத்து செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், 4 சதவீத இடஒதுக்கீட்டு ரத்து முடிவை அமல்படுத்தக் கூடாது என கர்நாடகா அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இதனிடையே, கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுவிட்டது என்றும், மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியாது என தொடர்ந்து பேசினார்.
இந்த நிலையில் இஸ்லாமியர் இடஒதுக்கீடு ரத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, அமித்ஷா பேச்சு குறித்து மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இதனையடுத்து, வழக்கு விசாரணையில் இருக்கும் போது மத்திய அமைச்சர் அமித்ஷா பொதுவெளியில் பேசியது தவறு என்று கடும் கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், மக்கள் பிரதிநிதிகள் பொதுவெளியில் கருத்துகளை முன்வைக்க கூடாது என எச்சரிக்கை விடுத்தது.
இடஒதுக்கீடு விவகாரத்தை அரசியலாக்க அனுமதிக்கவும் முடியாது என்றும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது.
விசாரணையின் போது கர்நாடகா அரசு தரப்பில், 4% இடஒதுக்கீடு ரத்து என்ற புதிய முடிவின் அடிப்படையில் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என மீண்டும் உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து இவ்வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.