உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் சின்னவெங்காயம் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், நிலையான விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், கிணற்றுப்பாசனதில் இரு சீசன்களில், சின்ன வெங்காயம் பல ஆயிரம் ஏக்கரில், சாகுபடி செய்யப்படுகிறது.
பிற காய்கறி சாகுபடியை விட இந்த சாகுபடிக்கு, அதிக செலவாகிறது. அறுவடையின் போது விலை வீழ்ச்சி ஏற்பட்டால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப் படுகின்றனர். கடந்த, தை பட்டத்தின் பின்பு நடவு செய்யப்பட்ட சின்னவெங்காயத்தின் அறுவடைப் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.
இதுகுறித்து பேசிய விவசாயிகள், சின்னவெங்காய சாகுபடியில், ஏக்கருக்கு, 30 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக செலவாகிறது. தொழிலாளர்கள் தட்டுப்பாடு காரணமாக இந்தாண்டு அறுவடை செலவும் பல மடங்கு அதிகரித்துள்ளது. மழை இல்லாததால், பயிரின் வளர்ச்சி பாதித்துள்ளது. அறுவடை பணிகள் தொங்கியுள்ள நிலையில், கிலோ 20 , 30 ரூபாய்க்கும் வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்கின்றனர். இந்த விலை கட்டுப்படியாகாது. அறுவடை சீசனில், ஏற்றுமதி வாய்ப்புகள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இருப்பு வைத்து விற்பனை செய்ய தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.