திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள மூணார் சாலையில் உலா வந்த காட்டுயானை, சாலையில் சென்ற வாகனங்களைத் தாக்கியதில் 3 வாகனங்கள் சேதமடைந்தன.
திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணார் சாலையில் நடுரோட்டில் நின்ற காட்டு யானை (கொம்பன்) முன்பக்கத்தில் கொம்பினால் குத்தியதில் மூன்று வாகனங்கள் சேதமடைந்தன. மறையூரில் இருந்து கட்டுமானப் பொருட்களை கொண்டு வருவதற்காக உடுமலைப்பேட்டைக்கு சென்ற அமீன் என்பவர், டிப்பர்லாரியை ஓட்டிச் சென்றார். அப்போது, உடுமலைப்பேட்டை சின்னார் வனப்பகுதியில் நடுரோட்டில் நின்றிருந்த காட்டு யானை கொம்பன், டிப்பர் லாரியை நோக்கி நேரே வந்ததோடு, வாகனத்தின் முன்பகுதியை கொம்புகளால் குத்தித் தாக்கியது.
இதனால், தடுமாறிய டிப்பர் லாரி, எதிரே வந்து கொண்டிருந்த காரில் மோதி, பின்புறம் இருந்த மற்றொரு காரின் மீதும் மோதியது. இதனால், டிப்பர் லாரி உள்ளிட்ட 3 வாகனங்களும் சேதமடைந்தன. உடுமலை-மூணார் சாலையின் நடுவில் ஒற்றை யானை நீண்ட நேரம் நின்றதால் அப்பாதையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், அருகில் வந்த யானைக் கூட்டத்துடன் கொம்பன் ஒற்றை யானை திரும்பி சென்றதையடுத்து, போக்குவரத்து சீரானது.