ஜூன்.5
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ராஜ்பவனில் தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று தொடங்கி வைத்தார்.
‘உயர்கல்வி நிறுவனங்களின் பாடப் புத்தகங்களைத் தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பது’ என்ற தலைப்பில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. தமிழ்நாடு மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். காலை 9 மணிக்கு தமிழக ஆளுநர்-வேந்தர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த மாநாட்டில் பாரதிய பாஷா சமிதி தலைவர் சாமு கிருஷ்ண சாஸ்திரி, லக்னோ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் அலோக் குமார் ராய், இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் தலைவர் பேராசிரியர் நாகேஸ்வர ராவ் மற்றும் அனுவாதினி மொழிபெயர்ப்புக் கருவி நிறுவனர் புத்தா சந்திரசேகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டில், பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் எம். ஜெகதேஷ் குமார் ஆன்லைன் மூலம் துணை வேந்தர்களிடம் உரையாற்றினார். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், தமிழ் மொழியில் கிடைக்காத பாடப் புத்தகங்கள், குறிப்புப் புத்தகங்கள், ஆய்வுப் பொருட்கள் பல்கலைக்கழகங்களால் கண்டறியப்பட்டு, தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் தமிழில் கற்பித்தல் – கற்றல் செயல்முறையை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பது தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.