தமிழ்நாட்டில் அமைச்சரவையை தொடர்ந்து, முக்கிய அதிகாரிகளும் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். முதல்வரின் செயலாளர், நிதித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளின் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
அதன்படி, நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம் முதல்வரின் முதன்மை செயலாளராகவும். முதலமைச்சரின் முதன்மை செயலாளராக இருந்த உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளராக மாற்றப்பட்டிருக்கின்றனர். ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமுதா, உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும், உள்துறை செயலாளராக இருந்த பணீந்திர ரெட்டி, போக்குவரத்துத்துறை செயலாளராகவும், போக்குவரத்துத்துறை செயலாளர் கோபால், லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராகவும் மாற்றப்பட்டிருக்கின்றனர்.
பள்ளிக் கல்வித்துறை ஆணையராக இருந்த நந்தகுமார், மனித வள மேம்பாட்டுத்துறைச் செயலராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைச் செயலாளராக டி.ஜெகன்நாதன் மாற்றப்பட்டிருக்கிறார்.
அதேபோல, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி சுகாதாரத்துறை செயலாளராகவும், சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் ஊரக வளர்ச்சித்துறை செயலாளராகவும் மாற்றப்பட்டிருக்கின்றனர். கூட்டுறவுத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார். சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன் பொதுப்பணித்துறைக்கும், பொதுப்பணித்துறை செயலாளராக இருந்த மணிவாசம் சுற்றுலாத்துறைக்கும் மாற்றப்பட்டிருக்கிறார்கள்.
மனித வள மேம்பாட்டுத்துறைச் செயலராக இருந்த மைதிலி கே.ராஜேந்திரன், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் ஆணையராக இருந்த கணேஷ், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் இயக்குநராக மாற்றப்பட்டிருக்கிறார்.