ஆகஸ்டு,19-
80 மக்களவை உறுப்பினர்களை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு எம்.பி.மட்டுமே இருக்கிறார்.அவர் ,சோனியா காந்தி.பாஜக, சமாஜ்வாதி,பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு அடுத்இடத்தில் 5 சதவீத வாக்குகளோடு அந்த மாநிலத்தில் நோஞ்சான் குழந்தையாக காங்கிரஸ் உள்ளது.
உ.பி.மாநில காங்கிரஸ் தலைவராக தலித் சமூகத்தை சேர்ந்த பிரிஜ்லால் காப்ரி பதவி வகித்து வந்தார்.அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலை எதிர்கொள்ள மாநிலங்கள் தோறும் தலைவர்களை மாற்றி வரும் காங்கிரஸ் கட்சி,
உ.பி.யிலும் புதிய தலைவரை நியமனம் செய்துள்ளது. காப்ரிக்கு பதிலாக அஜய் ராய் என்பவரை உ.பி.மாநில காங்கிரஸ் தலைவராக டெல்லி மேலிடம் நியமித்துள்ளது. அந்த மாநிலத்தில் 5 எம்.பி.தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் பூமிகார் ஜாதியை சேர்ந்தவர் அஜய் ராய்.
இவர் பாஜகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியவர்.அந்த கட்சியின் சார்பில் கோல்சலா சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு மூன்று முறை தொடர்ச்சியாக வென்றவர்.இதே தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டும் ஒரு முறை ஜெயித்தார்.இது, வாரணாசி மக்களவைக்கு உட்பட்ட தொகுதி.
மக்களவை தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுக்காததால், பாஜகவில் இருந்து விலகி ,காங்கிரசில் சேர்ந்தார்.வாரணாசி எம்.பி.தொகுதியில் அடங்கும் பிந்த்ராசட்டசபை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களம் இறங்கி வெற்றி கண்டார்.
அஜய்ராய்க்கு சில கூடுதல் தகுதிகளும் உண்டு. கடந்த இரு தேர்தல்களில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர், அஜய். வரும் தேர்தலில் வாரணாசியில் பிரியங்கா போட்டியிடா விட்டால், இவர் தான் மோடியை எதிர்த்து மூன்றாம் முறையாக போட்டியிடுவார். உ.பி.,பீகார் போன்ற மாநிலங்களில் அரசியல் நடத்த கரடு முரடான தலைவர்கள் வேண்டும். அந்தத்தகுதியும் அஜய் ராய்க்கு உண்டு.பல போலீஸ் நிலையங்களில் இவர் மீது 16 வழக்குகள் உள்ளன. குண்டர் சட்டத்திலும் ஒரு முறை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
உ.பி.யில் காங்கிரசை அடுத்த கட்டத்துக்கு அஜ்ய ராய் கொண்டு செல்வார் என கட்சி மேலிடம் நம்புகிறது. பார்ப்போம்.
000