உறுதிமொழியை காப்பாற்றத் தவறினால் மீண்டும் வேலைநிறுத்த போராட்டம்…. சி.ஐ.டி.யு எச்சரிக்கை…

அரசு பேருந்துகளில் ஒப்பந்த முறையை நிறுத்தி வைப்பதாக அளித்து இருக்கும் வாக்குறுதியை தமிழக அரசு காப்பாற்றத் தவறினால் மீண்டும் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று சிஐடியு எச்சரித்துள்ளது. அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து இதனை தெரிவித்துள்ளார்.

புதிதாக வாங்கப்படும் மாநகர பஸ்களை அரசு-தனியார் பங்களிப்புடன் ஓட்டுவதற்கு சாத்தியக்கூறுகளை போக்குவரத்து துறை ஆராய்ந்து வந்தது. இதற்கு தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்பட பல்வேறு சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் 12 போக்குவரத்து பணிமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் 400 ஊழியர்கள் நியமிக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து வருவதாக மாநகர பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மத்தியில் வேகமாக தகவல் பரவியது.

இதனால் மாநகர அரசு பேருந்து ஓட்டுநர்கள் திடீரென்று ஆங்காங்கே பஸ்களை நிறுத்தி பயணிகளை கீழே இறக்கிவிட்டு போராட்டத்தில் குதித்தனர். போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு இந்த தகவல் தெரியவந்ததும் அவர் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டார். இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று அரசு பேருந்து ஊழியர்கள் தொழிற்சங்கத்தினரிடம் வற்புறுத்தி வருகின்றனர்.

இதனால் பேருந்து ஊழியர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளை எடுத்து சொல்லவும், போக்குவரத்து துறையை தனியார் மயமாக்க கூடாது என்பதை பற்றி வலியுறுத்தி பேசவும் தொ.மு.ச. தொழிற்சங்க பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி. போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டியை இன்று சந்தித்து பேசினார். அவருடன் தொ.மு.ச. தொழிற்சங்க நிர்வாகிகளும் சென்று சந்தித்தனர். அதன்பிறகு தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரையும் சந்தித்து பேசினர்.

இந்நிலையில், அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை அடுத்து சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் பேட்டி அளித்தார். அப்போது அவர், பேச்சுவார்த்தையில் ஒப்பந்த முறையை நிறுத்தி வைப்பதாக கூறியுள்ளனர். வாக்குறுதியை மீறினால் மீண்டும் போராட்டம் நடக்கும். வரும் 9-ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர். விரைவாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *