உலகின் சக்திவாய்ந்த தலைவர்கள் தரைவரிசைப் பட்டியலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 78 சதவீத வாக்குகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்கடன் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ‘மார்னிங் கன்சல்ட்’ நிறுவனம், உலகின் முன்னணி கருத்துக்கணிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். இந்தியா உட்பட உலகின் மிக முக்கியமான 22 நாடுகளின் தலைவர்கள் குறித்து அந்தந்த நாடுகளின் மக்களிடம் கடந்த ஜனவரி மாதம் 26-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை இந்நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதனடிப்படையில், உலகின் சக்திவாய்ந்த தலைவர்கள் தரவரிசை பட்டியலை ‘மார்னிங் கன்சல்ட்’ நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார். இந்தியாவில் இது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 78 சதவீதம் பேர் பிரதமர் மோடிக்கு ஆதரவாகவும், 18 சதவீதம் பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர். மீதமுள்ள 4 சதவீதம் பேர் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இரண்டாவது இடத்தை 68 சதவீத வாக்குகளுடன் மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒபரடோர் பிடித்துள்ளார். அந்நாட்டில் அவருக்கு எதிராக 28 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்து அதிபர் ஆலைன் பெர்செட் 62 சதவீத வாக்குகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். 4வது இடத்தை ஆஸ்திரேலிய அதிபர் அந்தோணி அல்பேன்ஸ் 58 சதவீத வாக்குகளைப் பெற்று பிடித்துள்ளார்.
பிரேசில் அதிபராக அண்மையில் தேர்வான லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா இந்தப் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, 40 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. அவருக்கு எதிராக 52 சதவீதம் மக்கள் வாக்களித்துள்ளனர். எனவே, அவர் தரவரிசை பட்டியலில் பின்தங்கி 7-வது இடத்தில் உள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அயர்லாந்து அதிபர் லியோ வரத்கர், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான் செஸ், சுவீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளில் சர்வாதிகார ஆட்சி நடப்பதால் அந்த தலைவர்கள் குறித்து கருத்து கணிப்பு நடத்தவில்லை என்று ‘மார்னிங் கன்சல்ட்’ நிறுவனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.