ஜுலை, 18 -இந்தியாவின் வட மாநிலங்களில் பெய்த கன மழையினால் தலைநகர் டெல்லிக்குள் வெள்ளம் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் போது உலகத்தின் பல நாடுகளில் வெயில் கொடுமை இதுவரை இல்லாத அளவுக்கு உள்ளது.
இந்த வெப்ப அலை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சீனா மற்றும் ஜப்பானை வறுத்து எடுத்துக் கொண்டிருக்கிறது. ஐரோப்பாவில் இத்தாலி இதுவரை இல்லாத வெப்பத்தை அனுபவித்து வருகிறது. ரோம், போலோக்னா மற்றும் புளோரன்ஸ் உள்ளிட்ட 16 நகரங்களுக்கு சுகாதார அமைச்சகம் சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டு உள்ளது. இதோடு அல்லாமல் வெப்பம் இன்னும் கூடும் என்பதால் பொதுமக்கள் அதனை சமாளிக்க தயாராக இருக்ம் படி அந்த நாட்டு வானிலை மையம் கேட்டுக் கொண்டிருக்கிறது.
கடந்த வாரத்திய திங்கட்கிழமை ( ஜுலை 10 ) ரோமில் தெர்மோமீட்டர் 40 டிகிரி செல்சியஸ் (104 ஃபாரன்ஹீட்) ஆகவும், செவ்வாய்கிழமை( ஜுலை, 11) 43 டிகிரி செல்சியஸ் (109 எஃப்) ஆகவும் வெப்பநிலையைக் காட்டிய போது பொது மக்கள் பெரும் அச்சத்திற்கு ஆளானர்கள். அந்த அச்சம் ஒரு வாரம் ஆகியும் இன்னும் மக்கள் மனைதை விட்டு அகலவில்லை.
ஜப்பான் நாட்டில் அடுத்த சில நாட்களில் வெப்பநிலை 38 முதல் 39C (100 முதல் 102F) வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இது அந்த நாட்டைப் பொறுத்தவரை அதிகபட்ச வெப்பம் ஆகும்.
ஜப்பானில் ஒரு புறம் வெயில் கொளுத்திக் கொண்டிருக்கும் போது வடக்கு நகரமான அகிதாவில் கன மழை கொட்டித் தீர்த்தது. நகரத்தின் பல இடங்களை வெள்ளம் சூழந்தது, 9,000 பேர் தங்கள் வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. தெற்கு ஜப்பானையும் மழை விட்டுவைக்கவில்லை. அந்கு மழைக்கு 11 பேர் இறந்தனர்.
அமெரிக்காவில் கலிபோர்னியாவில் இருந்து டெக்சாஸ் வரை கடுமையான வெப்ப அலை நீடிக்கிறது. இந்த வெப்ப அலையின் உச்சம் இந்த வார இறுதியில் எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான அரிசோனாவில், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையே வெப்பத்துடன் போராடுவதாக மாறியுள்ளது.
அந்த மாநில தலைநகரான ஃபீனிக்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை 43C (109F) க்கு மேல் வெப்பம் பதிவானது. அன்று மட்டும் அல்ல. அதற்கு முந்தைய நாட்களிலும் இதே அளவு வெப்பம் நீடித்தது.
அமெரிக்காவின் காலநிலை கொள்கை ஆலோசகர் ஹன்னா சஃபோர்ட், குறைந்த வருமானம் கொண்ட சமூகங்கள் வெப்ப அலைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளார். அந்த நாட்டு அதிகாரிகள்,பகலில் வெளியில் நடமாடுவதை தவிர்க்கவும், உடலில் இருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேறாமல் இருக்கும் படி பார்த்துக் கொள்ளும்படியும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
பூமியின் வெப்பமான இடங்களில் ஒன்றான கலிஃபோர்னியாவில் வெப்பம் 54C (130F) ஆக உயரலாம் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னையில் ஏப்ரல், மே மாதங்களில் பகல் நேர வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டுவதே நமக்கு பெரும் அவதியாக இருக்கும் போது 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் எப்படி இருக்கும் என்று நினைத்தாலே வியர்க்கிறது.
000