June 11, 23
444 ரன்கள் சேஸிங் செய்து இந்திய அணி சாதனை படைக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியஅணி 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த மேட்ச்சின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 469 ரன்களும், இந்திய அணி 296 ரன்களும் எடுத்தது. 2 ஆவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 270 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து 444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடினர். டெஸ்ட் போட்டி வரலாற்றில் இந்த ரன்னை எந்த அணியும் வெற்றிகரமாக சேஸிங் செய்தது கிடையாது. இந்நிலையில் மிக முக்கியமான ஆட்டத்தில் வரலாற்று சாதனையை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடினார்கள்.
தொடக்க வீரர்களாக களம் இறங்கிய சுப்மன் கில் 19 பந்துகளில் 18 ரன்கள் எடுத்திருந்தபோது சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான கேப்டன் ரோஹித் சர்மா 60 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து லயோன் பவுலிங்கில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த புஜாரா 47 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து வெளியேறினார். நேற்றைய 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்திருந்தது. இன்னும் 280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் கோலி மற்றும் ரஹானே ஆகியோர் களத்தில் இறங்கினர்.
78 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 49 ரன்கள் எடுத்திருந்த விராட் கோலி, போலந்த் பந்து வீச்சில் ஸ்டீவன் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரவிந்திர ஜடேஜா போலந்த் பவுலிங்கில் அலெக் கேரியிடம் கேட்ச் கொடுத்து ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இதனால் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 184 ரன்களுடன் தடுமாறத் தொடங்கியது. ரஹானே 108 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஷர்துல் தாகூர் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த கே.எஸ்.பரத் 41 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
உமேஷ் யாதவ் மற்றும் முகம்மது சிராஜ் ஆகியோர் தலா 1 ரன்னில் வெளியேற 63.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 234 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் லயோன் 4 விக்கெட்டுகளையும், ஸ்காட் போலந்த் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.