மே.12
ஊட்டியில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் படகுப் போட்டி நடத்தப்பட்டது. இதில், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான கோடை விழா கடந்த 6ம் தேதி தொடங்கியது. அதன் தொடக்கமாக, கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி நடைபெற்றது. சுற்றுலாப்பயணிகளை உற்சாகப்படுத்த சுற்றுலாத்துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் உள்ளிட்டவையும் நாள்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
நாளை சுற்றுலாப் பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில், ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்கப்படவுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஊட்டி படகு இல்லத்தில் நேற்று படகு போட்டி நடத்தப்பட்டது. ரம்மியமான சூழலில் நடந்த இந்தப் படகுப் போட்டி பல்வேறு பிரிவுகளாக நடைபெற்றது. இதில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
ஆண்கள் இரட்டையர் மற்றும் தம்பதிகள் ஆகிய இரு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் உற்சாகத்தோடுபங்கேற்றனர்.இந்தப் போட்டியில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் கேரளாவின் நிஷாத்-ஆசிப் ஜோடி முதலிடம் பிடித்தது. இதேபோல் ஊட்டியை சேர்ந்த தேவா-சுபாஷ் ஜோடி 2-ம் இடத்தையும், கோவை திருமூர்த்தி-நிதிஷ் ஜோடி 3-வது இடத்தையும் வென்றது.
இதேபோல் கலப்பு இரட்டையர் பிரிவில் (தம்பதியினர் பிரிவு) கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மிருத்துஞ்ஜை-பூர்வை ஜோடி முதலிடம் பிடித்தது. ஒடிசாவை சேர்ந்த நவாஸ், அல்பக்ஹான் ஜோடி 2-ம் இடமும், சென்னையை சேர்ந்த மணி, சுதா தம்பதி 3-வது இடமும் பிடித்து அசத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அம்ரித் பரிசுகள் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.