எகிறும் கேஸ் சிலிண்டர் விலை… சாதகமாக பயன்படுத்தும் எதிர்க்கட்சிகள்!

ஏப்ரல் 19

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எல்.பி.ஜி கேஸ் சிலிண்டரின் விலை முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகாவில் அரசியல் சூடு அனல்பறக்க தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கல், தேர்தல் பிரச்சாரம், வாக்குறுதிகள், கட்சிகளின் வியூகம் என பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஆளும் பாஜகவை எப்படியாவது தோற்கடித்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விட வேண்டும் என்று காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதேபோல் கிங் மேக்கர் அந்தஸ்தை இழந்துவிடக் கூடாது என ஒக்கலிகா வாக்குகளையும், ஓல்டு மைசூரு மண்டலத்தையும் குறிவைத்திருக்கிறது மதச்சார்பற்ற ஜனதா தளம்.

இந்நிலையில் அரசியல் கட்சிகளின் வெற்றியை தீர்மானிப்பதில் எந்தெந்த விஷயங்கள் முக்கிய பங்காற்றும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த லிஸ்டில் கேஸ் சிலிண்டர் விலை பிரதானதாக இடம்பெற்றுள்ளது. பொதுமக்களின் தினசரி வாழ்வில் அத்தியாவசியமான ஒன்றாக எரிபொருள் காணப்படுகிறது. அதில் சமையல் எரிவாயு என்பது தவிர்க்க முடியாத நிலையில் உள்ளது. இதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது சாமானியர்களுக்கு பெரும் சுமையாக மாறி வருகிறது.

உஜ்வாலா திட்டத்தின் கீழ் மானிய விலையில் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அதனை உரிய முறையில் நிறைவேற்றவில்லை. இதனால் வீட்டு செலவை சமாளிப்பதில் பெண்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தை காங்கிரஸ் கட்சி கையிலெடுத்து பிரச்சாரக் களத்தில் பயன்படுத்தி வருகிறது. கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டிகே சிவக்குமார் தனது பிரச்சாரத்தில் பேசுகையில், சட்டமன்ற தேர்தலுக்கு சில நாட்களே இருக்கின்றன.

எனவே வாக்கு செலுத்த புறப்படும் முன்பு அனைவரும் தங்கள் வீட்டில் உள்ள சமையல் எரிவாயு சிலிண்டரை கும்பிட்டு விட்டு வாருங்கள். அதன்பிறகு யாருக்கு வாக்கு செலுத்தலாம் என முடிவு செய்யுங்கள் எனக் கூறினார். மேலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2014ஆம் ஆண்டிற்கு முன்பு சமையல் எரிவாயு சிலிண்டர் 410 ரூபாயாக இருந்தது. ஆனால் தற்போது 1,100ஐ தாண்டிவிட்டது. இந்த விஷயத்தை அனைத்து பிரச்சாரக் கூட்டங்களிலும் முன்வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *