May 18,2023
கள்ளச்சாராய மரணம் தொடர்பாக ஆளுநரை சந்தித்து உரிய விசாரணை நடத்துமாறு ஈபிஎஸ் புகார் மனு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 13 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பம் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் கள்ளச்சாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்தனர். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இதையடுத்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ரூ. 10 லட்சம் நிவாரணமாக அறிவித்த நிலையில் இந்த வழக்குகள் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறைக்கு மாற்றம் செய்யப்படும் என்று தெரிவித்தார். முதல்வரின் உத்தரவின் பேரில் இவ்வழக்கை குற்ற பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு காவல்துறை தலைமைய இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அத்துடன் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் விஷச்சாராய விவகாரத்தில் தமிழ்நாடு அரசை கண்டித்து மே 22 ஆம் தேதி காலை 10:30 மணி அளவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பேரணியும் அதனை தொடர்ந்து ஆளுநர் புகார் மனு அளிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக விஷச்சாராய சம்பவத்தால் பலர் உயிரிழந்த நிலையில் இதற்கு தார்மீகமாக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.