அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிப்பது குறித்து தேர்தல் ஆணையம் புதன் கிழமை நடத்த உள்ள ஆலோசனை அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களால் தாம் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அங்கீகரிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி தாக்க செய்த மனுவை விசாரித்த டெல்லி உயாநீதிமன்றம் ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் முடிவெடுக்குமாறு உத்தரவிட்டு இருந்தது. இந்த கெடு முடிவதற்கான அவகாசம் நெருங்கிவருவதால் தேர்தல் ஆணையர்கள் மூன்று பேரும் புதன் கிழமை டெல்லியில் கூடி ஆலோசனை நடத்த உள்ளர்கள்.
இந்த ஆலோசனையில் எடுக்கப்படும் முடிவை பொறுத்தே எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக நீடிக்க முடியுமா என்பது உறுதியாகும். இதற்காக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்த பொதுக்குழு உறுப்பினர்களின் விவரம் ஆகியவற்றை எடப்பாடி பழனிசாமி தரப்பு தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்து உள்ளது.
எடப்பாடியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தரப்பும் தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளது. அவர் தரப்பு அளித்துள்ள மனுவில், பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது என்று தாங்கள் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நிலுவையில் உள்ளதால் எடப்பாடி கோரிக்கையை ஏற்கக்கூடாது என்று கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
இவர்கள் இரண்டு பேரும் சொல்வதில் எதை ஏற்பது என்பது பற்றி தேர்தல் ஆணையர்கள் புதன் கிழமை முடிவு எடுக்க உள்ளனர். அந்த முடிவை அவர்கள் உடனே வெளிப்படுத்தலாம். அல்லது தங்களுக்கு உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கவும் வாய்ப்பு உள்ளது.
மராட்டிய மாநிலத்தில் சிவசேனா கட்சியில் கடந்த ஆண்டு பிளவு ஏற்பட்ட போது அதிக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஷிண்டே பக்கம் இருந்தனர். இதனால் சிவசனோ கட்சியும் தேர்தல் சி்ன்னமும் ஷிண்டே அணிக்குத்தான் சொந்தம் என்று தேர்தல் ஆணையம் தீர்ப்புக் கூறியது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் பார்த்தால் அதிமுகவின் மொத்த எம்.எல்.ஏ.க்களான 64 பேரில் 61 பேர் எடப்பாடி அணியில் உள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களிலும் அதிகம் பேர் ஆதரவு அவருக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.