ஜுலை, 19-
மூன்றாவது முறையாக எளிதில் பிரதமர் நாற்காலியில் அமர்ந்து விடலாம் என்று நினைத்திருந்த மோடிக்கு, எதிர்க்கட்சிகளின் பெங்களூர் கூட்டம் தோல்வி பயத்தைக் காட்டி விட்டது.
பாட்னாவில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஏற்பாட்டில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் 17 எதிர்க்கட்சிகள் பங்கேற்ற நிலையில் நேற்று காங்கிரஸ் முன்நின்று நடத்திய பெங்களூரு ஆலோசனை கூட்டத்தில் 26 கட்சிகள் கலந்து கொண்டுள்ளன.
காங்கிரசுடன் ஒரு போதும் பயணிக்க மாட்டார்கள் என்று கருதப்பட்ட மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் இந்த கூட்டங்களில் கலந்து கொண்டது,முக்கியமான திருப்பம் என்றே சொல்ல வேண்டும்.
இதனை முன் கூட்டியே மோப்பம் பிடித்து உளவுத்துறை சொல்லி விட்டதால் அவசர அவசரமாக டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது பாஜக.38 கட்சி தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.
’’அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை போன்ற ஏஜென்சிகள் மூலம் மிரட்டி, இந்த கூட்டத்துக்கு சில கட்சிகள் அழைக்கப்பட்டுள்ளனர்’என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி இருப்பதை புறம் தள்ளிவிட முடியாது.
கடந்த மக்களவை தேர்தலின் போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், அகாலிதளம் போன்ற பெரிய கட்சிகள் பாஜக அணியில் இருந்து வெளியேறி விட்டன. அதற்கு முன்பாகவே மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு போன்றோர் விலகி விட்டார்கள். இந்த நிலையில்,புதிய கட்சிகளை சேர்க்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது.
அதிமுக தவிர பாஜக அணியில், எந்த பிரதான கட்சியும் இல்லாத சூழலில், டெல்லி கூட்டத்தில் பிரதமர் மோடி இப்படி பேசி இருப்பது வியப்பாகவே உள்ளது.
‘தேசிய ஜனநாயக கூட்டணி அரசை மக்கள் மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்த்த முடிவு செய்து விட்டார்கள். கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 38 சதவீத ஓட்டுகளையும், 2019 தேர்தலில் 45 சதவீத ஓட்டுகளையும் பெற்றது.வரும் தேர்தலில் 50 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகளை வாங்குவோம்’என்று முழங்கியுள்ளார்.
கடந்த தேர்தலில் ஓ.பி.எஸ். சை உள்ளடக்கிய அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற பாஜக ஒரு இடத்திலும் வெல்லவில்லை. ஓபிஎஸ் மகன் மட்டுமே அந்த கூட்டணியில் ஜெயித்தார். இப்போது ஓபிஎஸ்சும் இல்லாத நிலையில் தமிழ்நாட்டில் எத்தனை இடங்களில் பாஜகவால் வெல்ல முடியும் என்பது அரசியல் நோக்கர்கள் எழுப்பும் கேள்வி.
தமிழகம் போலவே பல மாநிலங்களின் பாஜகவின் நிலை,இதுதான். ஆனலும் அந்த மாநிலங்களில் வெல்வதற்கு பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது.
என்ன வியூகம்?
நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 80 தொகுதிகள் உள்ளன. பாஜக கூட்டணியில் இப்போது இல்லாத மாயாவதியின் கட்சியை தங்கள் அணியில் சேர்க்க தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. சமாஜ்வாதி கூட்டணியில் உள்ள ஆர்.எல்.டி.கட்சியை இழுக்கவும் ஏற்பாடு நடக்கிறது.
உ.பி.க்கு அடுத்த படியாக மகாராஷ்டிராவில் 48 தொகுதிகள் உள்ளன. கடந்த முறை சிவசேனா கூட்டணியில் இருந்ததால் 41 இடங்களில் பாஜக அணி வெல்ல முடிந்தது. இப்போது காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் ஒரே அணியில் இருப்பதால், தோல்வி நிச்சயம் என தெரிந்து அந்த கட்சிகளில் பிளவை ஏற்படுத்தியது.
தேசியவாத காங்கிரசில் இருந்து சரத்பவார் அண்ணன் மகன் அஜித்பவாரும், சிவசேனாவில் இருந்து ஏக்நாத் ஷிண்டேயும் ,பாஜக பக்கம் வந்து விட்டனர். அந்த மாநிலத்தில் பெரும்பான்மை தொகுதிகளைஅள்ளலாம் என நினைத்தது ,பாஜக.
ஆனால் பாஜகவின் செயலால்,மகாராஷ்டிர மக்கள் கொதிப்படைந்துள்ளதால் சரத்பவார், உத்தவ் தாக்கரே ஆகிய இருவரையும் அனுதாப அலை கரை சேர்க்கும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பீகார்.
பீகாரில் மொத்தம் 40 இடங்கள். ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்திருந்ததால் 39 தொகுதிகள் ,கடந்ததேர்தலில்,பாஜக கூட்டணிக்கு கிடைத்தன. பாஜக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகி ஆர்.ஜே.டி மற்றும் காங்கிரசுடன் அணி சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. அந்த கூட்டணி பலம் வாய்ந்தது என்பதால்,முன்னாள் முதலமைச்சர் ஜிதன்ராம் மாஞ்சி, ராம்விலாஸ் பஸ்வான் மகன் சிராக் ஆகியோரை தங்கள் அணிக்குள் கொண்டு வந்துள்ள பாஜக, நிதிஷ்குமார் கட்சியில் பிளவை உண்டாக்க காய் நகர்த்தி வருகிறது.
அண்மையில் நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்த பாஜக, தெற்கே தங்களுக்கு இருந்த ஒரே மாநிலத்தையும் இழந்து விட்டது. உட்கட்சி பூசலிலும் சிக்கி உள்ளது. இதனால் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளத்தை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர பகீரத பிரயத்தங்களை மேற்கொண்டு உள்ளது.
பஞ்சாப்.
பாஞ்சாபில் அகாலி தளம் இல்லாத நிலையில், அங்கு பாஜகவுக்கு அடித்தளம் கிடையாது.ஆம் ஆத்மியும் ,காங்கிரசும் தான் அங்கு பிரதான கட்சிகள். அகாலிதளத்தை மீண்டும்,பாஜக கூட்டணிக்குள் கொண்டுவரும் வேலை வேகமெடுத்துள்ளது.
இந்நிலையில் 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள புதிய கூட்டணியான ’இந்தியா’ ,பாஜகவுக்கு பெரும் சவால் என்பதில் சந்தேகம் இல்லை.
பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வது, பாஜகவுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்துவது என இந்த கூட்டணியில் அடுத்த கட்ட நகர்வுகளை நாடே எதிர்நோக்கி உள்ளது.
இவைகளை அவர்கள் சிறப்பாக செய்துவிட்டால் , மோடிக்கு சவால் கடுமையாகவே இருக்கும்.
0000