ஜுலை, 18-
தமிழ் நாட்டில் ஊழல் வழக்குகளை எதிர்கொண்டு இருக்கும் திமுகவுக்கு எதிர்க்கட்சிகள் சுத்தமான சான்றிதழ் கொடுத்து பெங்களூர் கூட்டத்திற்கு அழைத்து இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடியுள்ளார்.
அந்தமான் நிக்கோபர் தீவுகளில் உள்ள வீர சாவர்க்கர் விமான நிலையத்தின் புதிய டெர்மினலை கானொளி வாயிலாக திறந்து வைத்துப் பேசிய மோடி, எதிர்க்கட்சிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.
“அவர்களுக்கு குடும்பம் முதன்மையானது, தேசம் ஒன்றுமில்லை. ஊழல்தான் அவர்களின் முக்கிய சக்தியாக விளங்குகிறது. பெரிய ஊழல் செய்தவர், அதிக ஊழல் செய்த நபர் எல்லாம் கூடியிருக்கிறார்கள். அதிக ஊழல் செய்தவரை போற்று வதற்காக உயரான நாற்காலி போடுகிறார்கள்.
ஜனநாயகம் என்றால் ‘மக்களால்,மக்களுக்காக’. ஆனால் எதிர்க்கட்சிகளின் மந்திரம் – குடும்பம், குடும்பம், குடும்பம்,” என்று தெரிவித்த மோடி பெங்களூரில் எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டத்தை “கடுமையான ஊழல்வாதிகள்” கூட்டம் என்று அழைத்தார்.
ஊழலை ஊக்குவிப்பதற்காகத்தான் இந்தக் கூட்டம் என்று மக்கள் சொல்கிறார்கள். தமிழகத்தில் ஊழல் வழக்குகள் இருந்தும் திமுகவுக்கு எதிர்க்கட்சிகள் அழைப்புக் கொடுத்துள்ளன. இடதுசாரிகளும், காங்கிரஸும் மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்துத் தேர்தல் வன்முறைகள் குறித்து வாய்மூடி மௌனமாக இருக்கின்றனர் ” என்று பிரதமர் கூறினார்.
பிரதமர் மோடி கடந்த சில நாட்களாகவே எதிர்க்கட்சிகளை ஊழல் கட்சிகள் என்று கடுமையான விமர்சனத்தை முன் வைத்து பேசுவது குறிப்பிடத் தக்கது
000