ஆகஸ்டு – 28

இப்போது கதாநாயகன் வேடத்தில் நடிக்க மட்டுமே முன்னுரிமை கொடுக்கும் காமெடி நடிகர் சந்தானம், கிக் என்ற புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த படத்தை ஃபார்ச்சூன் நிறுவனம் தயாரித்துள்ளது. கன்னடத்தில் வெளியான லவ்குரு; கானா பஜானா; விசில்;ஆரஞ்ச்போன்ற படங்களை இயக்கிய பிரசாந்த் ராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

சந்தானத்தின் ஜோடியாக,தாராள பிரபு படத்தில் நடித்த தான்யா ஹோப் நடிக்கிறார். தம்பி ராமையா, பிரம்மானந்தம், செந்தில், மன்சூர் அலிகான், மனோபாலா, ஒய்.ஜி.மகேந்திரன், ஷகிலா, கூல் சுரேஷ் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.படத்தின் ட்ரெய்லர் கடந்த ஜனவரி மாதமே வெளியானது. இந்தப்படத்துக்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது அடுத்த மாதம் 1-ம் தேதியன்று திரையரங்குகளில்’ கிக்’வெளியாகிறது.

இந்தப் படம் குறித்து சந்தானம் செய்தியாளர்களிடம் பேசியதாவது”

’’விஜய்க்கு ‘குஷி’ படம் மாதிரி எனக்கு ‘கிக்’ படம் அமைந்தது. திருமணத்துக்குப் பிறகு கணவன், மனைவிக்கு இடையே ஏற்படுகின்ற ஈகோ யுத்தம் எப்படி தீர்க்கப்படுகிறது என்பது திரைக்கதை.சென்னை, பாங்காங் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. நான் நடித்த படங்களில் எனக்கே இது வித்தியாசமான படமாக அமைந்துள்ளது.

பல ஹீரோக்களின் படங்களில் காமெடி நடிகராக இருந்து, ஹீரோவுடன் இருந்தபடியே கதையை நகர்த்த உதவி இருக்கிறேன். இதில் அந்தப் பொறுப்பை தம்பி ராமய்யா ஏற்றுள்ளார். கர்நாடகாவின் அனிருத் என்று சொல்லும் அளவுக்கு அர்ஜூன் ஜென்யா அருமையான பாடல்களை வழங்கி இருக்கிறார். ‘டிடி ரிட்டன்ஸ்’ படத்துடன் ‘கிக்’ படத்தை ஒப்பிட வேண்டாம். இதற்கு காரணம், இது சந்தானம் படம் இல்லை. இயக்குனர் பிரசாந்த் ராஜின் படம். சினிமாவில் பிசியாக இருந்து வரும் எனக்கு எந்த அரசியலும் சரிப்பட்டு வராது. எனவே,நான் அரசியலுக்கு வரமாட்டேன். தயவுசெய்து என்னை அரசியலில் இழுத்து விட வேண்டாம்’’என பேட்டியை முடிக்கும் போது கும்பிடு போட்டார்.

தனது சக நகைச்சுவை நடிகர் வடிவேலு அரசியலில் நுழைந்து சூடு பட்ட கதையை சந்தானம் மறப்பாரா என்ன?

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *