ஜனவரி-04,
30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் கோலோச்சிக்கொண்டிருப்பவர் ஷங்கர். பிரமாண்ட டைரக்டர் என்ற அடைமொழிக்கு சொந்தக்காரர். முதன் முறையாக ,அண்டை மாநிலமான தெலுங்கு தேசத்துக்கு சென்றுள்ளார்.
பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு, உச்ச நடிகர் ராம் சரண் ஆகியோருடன் இணைந்து ‘கேம் சேஞ்சர்’ எனும் படத்தை இயக்கியுள்ளார்.
படப்பிடிப்புக்காக ஐதராபாத்தில் ஆரம்பித்து நியூசிலாந்து வரை சென்றது, படக்குழு. உலகம் முழுவதும் 10 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆவதால்,ஊர் ஊராக படத்தை விளம்பரப்படுத்தும் வேலைகள் ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்தது.
கடந்த வாரம் அமெரிக்கா போனார்கள். ஐதராபாத்தில், வியாழக்கிழமை படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டு விளம்பர படலத்தை முடித்துள்ளது படக்குழு. டிரெய்லரை வெளியிட்டவர், தெலுங்கு பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி. இதில் ராம் சரண்,ஷங்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
‘கேம் சேஞ்சர்’ ட்ரெய்லரை வெளியிட்ட ராஜமவுலி, சுமக்க முடியாத அளவுக்கு , ஷங்கர் தலையில் ஐஸ் துண்டுகளை கொட்டினார்.
‘பொழுது போக்கு சினிமா என்று வந்துவிட்டால் ஷங்கர் தான் ஒரிஜினல் கேங்ஸ்டர் ‘ என தனது உரையை ஆரம்பித்தார், ராஜமவுலி.
‘இந்த படத்தை ஷங்கருக்கு தெலுங்கில் முதல் படமாக நான் பார்க்கவில்லை – காரணம் எங்களில் பலருக்கும் அவர் ஒரு தமிழ் இயக்குநர் அல்ல – தெலுங்கு இயக்குநர்.
இப்போது உள்ள இளம் தலைமுறை இயக்குநர்கள் பலரும் எங்களை பெருமிதத்துடன் பார்க்கலாம் – ஆனால் நாங்கள் அனைவரும் வியப்புடன் பார்க்கும் டைரக்டர் ஷங்கர்காரு தான்
இப்போது இயக்குநர்களாக இருக்கும் பலருக்கும் ஷங்கர்காரு தான் உத்வேகமாக இருந்தார்-எனக்கும் ஷங்கர்தான் உத்வேகமாக, ஊக்கியாக இருந்தார் ” என ராஜமவுலி ,தனது பேச்சை முடித்த போது, அரங்கம் அதிர்ந்தது.
ஜென்டில் மேன் ஷங்கர் அமைதியாகவே இருந்தார்.
*