கடந்த 50 ஆண்டுகளில் தமிழகத்தை உலுக்கிய முக்கிய நிகழ்வுகளில் பிரதானமானது, எம்.ஆர்.ராதாவால், எம்.ஜி.ஆர். சுடப்பட்ட சம்பவம்.
1967 -ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அனைத்து கட்சிகளும், அதற்கான ஆயத்தங்களில் இறங்கி இருந்த நேரம் அது.
எம்.ஜி.ஆரை. பரங்கிமலை சட்டமன்ற தொகுதி வேட்பாளராக திமுக தலைவர் அண்ணா அப்போதுதான் அறிவித்திருந்தார்.
சினிமாவை பொறுத்தவரை ,‘அரசகட்டளை’ படத்தை கிட்டத்தட்ட முடித்து விட்டு காவல்காரன் படத்தில் , எம் ஜி ஆர் நடித்துக்கொண்டிருந்த காலகட்டம்.
தமிழகம் முழுவதும் எம் ஜி ஆர் தேர்தல் சுற்றுப்பயணம் செய்வதற்கான அட்டவனை தயாராகி இருந்தது.
அப்போதுதான் , தமிழகத்தில் பிரளயத்தை உருவாக்கிய அந்த சம்பவம் நேரிட்டது.1967 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் தேதி , எம் ஜி ஆர், எம்.ஆர்.ராதவால் சுடப்பட்டார்.
எம் ஜி ஆரின் ராமாவரம் தோட்டத்திலேயே , இந்த அசம்பாவிதம் நடந்தேறியது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு எம் ஜி ஆர், பிழைத்துக்கொண்டது, எம் ஆர்.ராதாவுக்கு இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டது எல்லாம் ஊர் அறிந்த செய்தி.
எம் ஜி ஆரை, எதற்காக எம் ஆர் ராதா சுட்டார் ? என்பது இன்று வரை முழுமையான விடை தெரியாத கேள்வியாக இருக்கும் நிலையில் ,ஆர்.எம். வீரப்பன் இதற்கு பதில் அளித்துள்ளார்.
எம் ஜி ஆர், அமைச்சரவையில் அங்கம் வகித்த வீரப்பன், எம்ஜிஆரின் நிழலாக கருதப்பட்டவர். எம் ஜி ஆர் பிக்சர்சில் மானேஜராக இருந்தவர்.
இந்த துப்பாக்கிச் சூடு விவகாரம் குறித்து சில ஆண்டுகளுக்கு முன்னர், ஆர் எம் வீரப்பன் மனம் திறந்து பேசி இருந்தார்.
அவரது வாக்குமூலம் இது :
‘எம் ஜி ஆருக்கும், எம் ஆர்.ராதாவுக்கும் இடையே முன் பகை இருந்தது – சொந்த காரணங்களுக்காக அவர், எம் ஜி ஆரை சுட்டார் என்றெல்லாம் அப்போது பேசப்பட்டது. அப்படி சொல்வது உண்மை அல்ல. எம் ஜி ஆரை,ராதா சுட்டது, அரசியல் மோதலால்தான்.
சட்டசபை தேர்தலுக்கு கொஞ்சநாள் முன்பாக சென்னை விருகம்பாக்கத்தில் திமுகவின் சிறப்பு மாநாடு நடைபெற்றது. தேதியை சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஜனவரி 2.
அண்ணா, ராஜாஜி போன்ற தலைவர்களுடன் எம் ஜி ஆரும் மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். திரளான கூட்டம். அந்த தேர்தலில் திமுக வெல்லும் சூழலில்.அதே மாதம் 8 ஆம் தேதி பெரியார் திடலில், பெரியார் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
அவரது பேச்சில் ரொம்பவும் ஆவேசம் இருந்தது. ‘பச்சை தமிழரின் ஆட்சியை கவிழ்க்க அண்ணா, ராஜாஜி, எம் ஜி ஆர் போன்றோர் திட்டமிடுகிறார்கள்’ என்று கோபம் கொப்பளிக்க சொன்னார் பெரியார்.
அந்த நிகழ்ச்சியில் எம் ஆர் ராதாவும் கலந்து கொண்டிருந்தார்.அவரும் பேசினார். அந்த பேச்சில் எம் ஜி ஆர் மீதான தாக்குதலே பிரதானமாக இருந்தது. எம் ஜி ஆர் மீதான கோபத்தை வெளிப்படையாக காட்டினார், ராதா.
அந்த நிகழ்ச்சி முடிந்த சில நாட்களில் 12- ஆம் தேதி , எம் ஜி ஆரை, எம் ஆர் ராதா சுட்டு விட்டார்.
எம் ஜி ஆர்,சுடப்பட்டதற்கு, அரசியலே காரணம் என இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்’ என்று தன்னிலை விளக்கம் அளித்தார், ஆர்.எம்.வீ.
—