சொந்தமாக சினிமா தயாரிப்பதற்காக, எம் ஜி ஆர், தனது பெயரில் , ‘எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்’ எனும் பட தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து இருந்தார்.
எம்.ஜி.ஆர், நிர்வாக பங்குதாரர். அவரது அண்ணன் எம்ஜி சக்கரபாணி,பங்குதாரர். அந்த கம்பெனி ‘நாடோடி மன்னன்’ படத்தை தயாரிக்க முடிவு செய்து, ஆரம்ப கட்ட வேலைகளில் ஈடுபட்டிருந்தது.
வருமான வரி தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் என கருதிய எம் ஜி ஆர், அந்த நிறுவனத்தின் பெயரை,’ எம் ஜி ஆர் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என மாற்றினார்.
மேலும் பங்குதாரர்களின் எண்ணிக்கையையும் , அதிகமாக்கினார். எம் ஜி ஆரின் புதிய பட நிறுவனத்தில் ,ஒரு பங்குதாரராக ஆர்.எம்.வீரப்பன் சேர்க்கப்பட்டார். அப்போது எம் ஜி ஆரின் நாடக மன்ற நிர்வாகியாக வீரப்பன் இருந்தார். எம் ஜி ஆர் சம்மந்தப்பட்ட சினிமா வேலைகளையும் அவரே செய்து வந்தார்.
1958 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ‘நாடோடி மன்னன்’ ரிலீஸ் என அறிவித்திருந்தார், எம் ஜி ஆர். ஆனால் படமோ, பாதிதான் வளர்ந்திருந்தது.மாதங்கள் நகர்ந்து கொண்டே இருந்தன. ஷுட்டிங்கும் நடந்து கொண்டே இருந்தது. ஆனால் படப்பிடிப்பு முடிவதாக இல்லை. பட ரிலீஸ் தேதிகள் மாற்றப்பட்டுக்கொண்டே இருந்தன.
அந்த சமயத்தில் கச்சா பிலிமுக்கு கடுமையான தட்டுப்பாடு. சந்தையில் ஒரு ரோல் விலை- 70 ரூபாய். ஆனால் வெளிச்சந்தையில், 450 ரூபாய்க்கு விற்றார்கள். வேறு வழி இல்லை. அந்த விலைக்கே வாங்கப்பட்டது.
எம் ஜி ஆரிடம் பணம் கிடையாது. கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம். ஏற்கனவே , நாடோடி மன்னன்’படத்துக்கு 25 லட்சம் ரூபாய் செலவாகி இருந்தது. படத்தை முடிக்க மேலும் அதிக தொகை தேவைப்பட்டது.
அந்தப்படத்தை சென்னை பாரகன் தியேட்டரில் வெளியிட ஆர்.எம்.வீரப்பன், ஒப்பந்தம் செய்திருந்தார், அந்த தியேட்டரின் குத்தகைதாரர், மூலமாக ஏவி மெய்யப்பட்ட செட்டியாரிடம் கடன் வாங்குவது என முடிவு செய்தார், வீரப்பன்.
அப்போது,ஏவிஎம் நிறுவனத்தில் ஆடிட்டராக இருந்த சீனிவாசன் என்பவர்தான், பண விவகாரங்களை கவனித்துக்கொண்டிருந்தார். அவர் ஓகே சொன்னால்தான், ஏவிஎம் பணம் கொடுப்பார்.
சீனிவாசனை சந்தித்தார், வீரப்பன்.
‘ ‘நாடோடி மன்னன் படத்துக்கு கடன் அளிக்க செட்டியாருக்கு ஆட்சேபனை இல்லை –ஆனால் எம் ஜி ஆர் கையெழுத்து போட வேண்டும்’ என நிபந்தனை விதித்தார், ஆடிட்டர் சீனிவாசன்.
வீரப்பன் ஒப்புக்கொள்ளவில்லை. ‘ அவர் கையெழுத்திட மாட்டார். எம் ஜி ஆர் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர்களான நானும், சக்கரபாணியும் மட்டுமே, கையெழுத்து போடுவோம்..இந்த விவகாரத்தில் எம் ஜி ஆரை இழுக்க வேண்டாம்’என திட்டவட்டமாக சொல்லி விட்டார்.
இதன் பின் பல கட்டங்களாக பேச்சு வார்த்தை நீடித்தது.
ஒரு வழியாக ஏவிஎம் நிறுவனம் , எம் ஜி ஆருக்கு கடன் கொடுத்தது.கடன் ஒப்பந்தத்தில் எம் ஜி.ஆர் கையெழுத்து போடவில்லை. ஆனாலும் அவரது முகத்துக்காக, அவரது நாணயத்துக்காக , கடன் அளித்தார், ஏவிஎம்.
‘நாடோடி மன்னன் ‘ வசூலில் பெரிய சாதனை படைத்து, பணம் கொட்டியதும், ஏவிஎம் நிறுவனத்தில் வாங்கிய கடனை , முறையாக திருப்பிக்கொடுத்து செட்டில் செய்தார், வீரப்பன்.
—