ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

ஜூன்.1

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பாதுஷா நாயகம் தர்ஹாவில் இந்த ஆண்டுக்கான சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகீம் ஷாகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹா சந்தனக்கூடு திருவிழா, ஆண்டுதோறும் தேசிய ஒருமைப்பாட்டு விழாவாக நடத்தப்பட்டுவருகிறது. இந்தாண்டு 849-வது சந்தனக்கூடு திருவிழா மே 21-ம் தேதி மவுலீது (புகழ்மாலை) ஓதப்பட்டு விழா தொடங்கியது. அதனையடுத்து நேற்று மாலை கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

ஏர்வாடி குடியிருப்பில் உள்ள முஜாபிர் நல்ல இபுராகிம் லெவ்வை மஹாலில் இருந்து, நேற்று மாலை , கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக தர்ஹாவை வந்தடைந்தது. அலங்கார ரதம் தர்ஹாவில் 3 முறை வலம் வந்த பின்னர் சிறப்பு பிரார்த்தனைக்கு பின், பக்தர்களின் நாரே தக்பீர் முழக்கத்துடன் கொடி ஏற்றப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி, கீழக்கரை வட்டாட்சியர் பழனிக்குமார், ஏர்வாடி தர்ஹா ஹத்தார் நிர்வாக சபை உறுப்பினர்கள், ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் உள்ளிட்ட அனைத்து மதங்களையும் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு திருவிழா ஜூன் 12-ம் தேதி மாலை தொடங்கி, ஜூன் 13-ம் தேதி அதிகாலை பாதுஷா நாயகத்தின் மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஜூன் 19-ம் தேதி கொடியிறக்கத்துடன், பக்தர்களுக்கு நேர்ச்சி வழங்கப்பட்டு விழா நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *