ஐந்து கோடியில் உருவாகி ஐம்பது கோடி ரூபாயை அள்ளிய சினிமா!

ஜுலை, 2-

சினிமாவை கனவுத் தொழிற்சாலை என்பார்கள். பெரும் பட்ஜெட்டில் தயாராகும் உச்ச நட்சத்திரங்கள் படங்கள் படுதோல்வி காணும். குறைந்த செலவில் உருவாகி, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிவரும் திரைப்படம், அதிரி புதிரி ஹிட் அடிக்கும்.

ஒரு தலை ராகத்துக்கு முன்பாகவே இந்த மேஜிக் தொடங்கி இருக்கலாம். சில மாதங்களுக்கு முன் வந்த படங்களில் அப்படி ஒரு மாயாஜாலம் நிகழ்த்திய படம் ‘லவ்டுடே’. சில நாட்களுக்கு முன் ரிலீஸ் ஆன சினிமாக்களில், தயாரிப்பாளர் கனவிலும் நினைத்திராத வசூல் சாதனையை ஏற்படுத்திய படம், போர்தொழில்.

அறிமுக இயக்குநர் விக்னேஷ்ராஜா இந்த படத்தை டைரக்டு செய்துள்ளார். அசோக்செல்வனும் சரத்குமாரும் இணைந்து நடித்துள்ளனர். சைக்கோ கிரைம் ஜானர் படம்.

சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ராட்சசன் படம் அற்புதமான -தரமான கிரைம் த்ரில்லாராக கொண்டாடப்பட்டது. கடந்த ( ஜுன் மாதம் ) 9 ஆம் தேதி ரிலீஸ் ஆன போர்தொழில் படமும் . ராட்சசன் போல் நல்ல பெயர் வாங்கி வசூலையும் குவித்து வருகிறது.

இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 5 கோடி ரூபாய். 20 நாட்களில் 50 கோடி ரூபாயை ஈட்டி, தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என பல தரப்பினரையும் ஆனந்தப்படுத்தியுள்ளது, ‘போர்தொழில்’.

படம் இத்தனை பெரிய வெற்றியை பெறும் என எதிர்பாராத தயாரிப்பாளர், சோனிலைவ் நிறுவனத்துக்கு இதன் ஓடிடி உரிமையை விற்று விட்டார். வரும் 7 ஆம் தேதி சோனிலைவ் , இந்த படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளதால் திரையரங்கு அதிபர்கள் கிலி அடைந்துள்ளனர்.ஓடிடியில் வந்து விட்டால், யார் தியேட்டருக்கு வருவார்கள் என்ற கவலையே இதற்கு காரணம்.

‘கொஞ்சநாள் கழித்து ஓடிடியில் வெளியிடுங்களேன்’ என திரையரங்குகள் விடுத்த வேண்டுகோளை சோனி நிராகரித்து விட்டது.

000

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *