ஐ.சி.எஃப் தொழிற்சாலையில் வந்தேபாரத் ரயில்கள் தயாரிப்பு தீவிரம் – ரயில்வே அதிகாரிகள் தகவல்

ஜூன்.1

சென்னையில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் 8 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்களை அதிக அளவில் தயாரிக்கவும், தேவைப்பட்டால் 16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயிலும் இங்கு தயாரித்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரயில் பெட்டி தயாரிப்பில் உலகப் புகழ்பெற்று விளங்கும் சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் பல்வேறு வகைகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் இதுவரை தயாரிக்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக, தற்போது அதிநவீன வந்தே பாரத் ரயில் தயாரிப்பில் ஐசிஎஃப் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்கள் இடையே இயக்கப்பட்டு வரும் 18 வந்தே பாரத் ரயில்களும் இங்கு தயாரிக்கப்பட்டவையே. அதில், தெற்கு ரயில்வேயில் மட்டும் சென்னை – மைசூரு, சென்னை – கோவை, திருவனந்தபுரம் – காசர்கோடு ஆகிய 3 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. பொதுவாக இந்த ரயில்கள், 8 அல்லது 16 பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், ஐசிஎஃப் தொழிற்சாலையில் 8 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்களை அதிக அளவில் தயாரிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் பேசுகையில், ஐசிஎஃப்பில் தற்போது 19-வது வந்தே பாரத் ரயில் தயாரித்து வாரியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. கோவா – மும்பை இடையே ஜூன் 3-ம் தேதி முதல் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. இது 8 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில் ஆகும்.

வரும் மாதங்களில் 8 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்கள் அதிக அளவில் தயாரிக்கப்படும். ஏற்கெனவே இயக்கப்பட்டுவரும் 8 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்களில் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு 16 பெட்டிகள் கொண்ட ரயிலாக இயக்கப்படும் என்றனர்.

நடப்பாண்டில் சென்னை ஐசிஎஃப்பில் 736 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளன. அதன்படி, தலா 16 பெட்டிகள் கொண்ட 46 ரயில்கள் அல்லது தலா 8 பெட்டிகள் கொண்ட 92 ரயில்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பைரயில்வே துறை சில மாதங்களுக்கு முன்பு ஐசிஎஃப் நிர்வாகத்துக்கு அனுப்பியது. அந்த உத்தரவின்பேரில், வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி சென்னை ஐசிஎஃப்-பில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *