May 04, 2023
கோரமண்டல் ரயில் விபத்துக்குள்ளானதற்கும், மாபெரும் உயிரிழப்பு நிகழ்ந்ததற்கும் மத்திய அரசின் அலட்சியமே காரணம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.
கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களின் இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது.
இந்த நிலையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கடந்த 2ம் தேதி மாலை 3:30 வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் நேற்று மாலை 4:50 மணிக்கு சென்னை வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற ரயில் தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தில் 288 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு மேலும் 13 உடல்கள் கண்டெடுக்கப்பட்டு, இதுவரை 301 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் 200-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே மின்னணு இணைப்பு அதாவது எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங்கில் ஏற்பட்ட மாற்றத்தால் இந்த விபத்து ஏற்பட்டதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இந்நிலையில், பயணிகளின் பாதுகாப்பை அலட்சியப்படுத்திய மத்திய அரசின் அணுகுமுறையே இந்த விபத்துக்கு காரணம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவில் 13,200 ரயில் இன்ஜின்கள் உள்ளன. இவற்றில் வெறும் 65 இன்ஜின்களில் மட்டுமே கவச் எந்திரம் பொறுத்தப்பட்டதாக கடந்த ஆண்டு ரயில்வே ஆலோசனைக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தீவிர உணர்வோடு இந்த கருவி அனைத்து இன்ஜின்களுக்கும் பொருத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.
2022 மார்ச்சுக்கு பின் இந்த ஓராண்டில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதை நாட்டு மக்களுக்கு மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். பயணிகள் பாதுகாப்பை அலட்சியப்படுத்தி, விளம்பரத்தில் மட்டுமே மத்திய அரசு கவனம் செலுத்தியதே இந்த மாபெரும் உயிரிழப்புக்கு காரணம்’ என்று பதிவிட்டுள்ளார்.