ஜூன்.5
ஒடிசாவில் கடந்த 2ம் தேதி இரவு நடந்த கோர ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்த ரயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளது. 275 பேரின் உயிரிழப்புக்கு காரணமான இந்த விபத்துக்கு நாசவேலை காரணமாக இருக்கலாம் என்று மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் கடந்த 2-ந்தேதி நிகழ்ந்த ரெயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்திய வரலாற்றில் மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக இந்த விபத்து பதிவாகியுள்ளது. நவீன தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலத்தில் இவ்வளவு பெரிய விபத்து நிகழ்ந்திருப்பது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
இந்த விபத்திற்கான காரணத்தை கண்டுபிடித்து எதிர்காலத்தில் இது போன்ற அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுப்பதற்காக, உடனடியாக உயர்மட்ட விசாரணைக்கு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டது. தென்கிழக்கு வட்டத்தின் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் சவுத்ரி தலைமையிலான குழு, இது தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளது.
இந்த விபத்தின் பின்னணியில் தொழில்நுட்ப கோளாறு இருக்குமோ? மனித தவறுகள் காரணமாக இருக்குமோ? ஏதேனும் சதிவேலை காரணமோ? என பல்வேறு கோணங்களில் இந்த குழு விசாரணை மேற்கொண்டுவருகிறது.
இது குறித்து பேசிய மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், விபத்துக்கான மூல காரணமும், அதற்கு காரணமானவர்களும் அடையாளம் காணப்பட்டு உள்ளதாக கூறினார். எலக்ட்ரானிக் இன்டர்லாக் அமைப்பில் செய்யப்பட்ட மாற்றமே இந்த விபத்துக்கான காரணம் என்றும், எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் மற்றும் ரெயில்வே சிக்னல் அமைப்பில் முக்கிய கருவியாக இருக்கும் எலக்ட்ரிக் பாயின்ட் எந்திரத்தின் அமைப்பு மாற்றப்பட்டு இருப்பதாகவும் அவர் அப்போது கூறினார். இதன் மூலம் மனித தவறே (நாசவேலை) விபத்தின் பின்னணியில் இருக்கலாம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த விபத்தில் தொழில்நுட்ப கோளாறு மற்றும் டிரைவர்களின் தவறு என்ற கூறுகள் நிராகரிக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் விபத்தின் பின்னணியில் நாசவேலை இருக்கலாமோ? என சந்தேகங்கள் வலுப்பெற தொடங்கியுள்ளது. எனவே இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளது. இதை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று மாலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ‘275 உயிர்களை பலிகொண்டு, 1,000-க்கும் மேற்பட்டோர் காயமடைவதற்கு காரணமான 3 ரெயில்கள் விபத்து தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்துவதற்கு நாங்கள் பரிந்துரைத்துள்ளோம்’ என்றார். கடந்த 3 நாட்களாக நாடு முழுவதும் பேசுபொருளாகி இருக்கும் ஒடிசா ரெயில் விபத்தின் பின்னணியில் நாசவேலை இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருப்பது அனைத்து தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.