ஜூன்.3
ஒடிசா மாநிலத்தில் நேற்றிரவு நடைபெற்ற ரயில் விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் ரயிலுடன் சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதுவரை பலி எண்ணிக்கை 200ஐத் தாண்டியுள்ளது. காயமடைந்தோர் எண்ணிக்கை 900-த்தை கடந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அமைச்சர்கள் உதயநிதி, எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையிலான தமிழகக் குழுவும் ஒடிசா விரைந்துள்ளது.
இந்த ரயில் விபத்து காரணமாக ஒடிசாவில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், சென்னையில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று மாலை நடைபெறவிருந்த கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செம்மொழிப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மலர்க் கண்காட்சியில் முதலமைச்சர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று கலைஞர் கருணாநிதியின் 100வது பிறந்த நாள் என்பதால், மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்துக்குச் சென்று மரியாதை மற்றும் ஓமந்தூரார் தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள கலைஞரின் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி மட்டும் நடைபெறும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார்.