கர்நாடக தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக ஒருங்கிணைந்து போட்டியிடுவோம் என்று மதச்சார்ப்பற்ற ஜனதா தளமும் காங்கிரஸூம் தெரிவித்தன. ஆனால் இன்று அவை தனித்து போட்டியிடுகின்றன என்று மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸை பா.ஜ.க.வின் சி.டி. ரவி தாக்கினார்.
பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளரும், சிக்மகளூர் சட்டப்பேரவை தொகுதியின் பா.ஜ.க.வின் வேட்பாளருமான சி.டி. ரவி செய்தியாளர்களிடம் கூறியதாவது: என்னை வேட்பாளராக அறிவித்த கட்சிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தேர்தலில் புதிதாக 52 பேருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. பா.ஜ.க. மற்ற கட்சிகளில் இருந்து தனித்து நிற்கிறது. புதிய சோதனைகளை மேற்கொண்டு வருவதால் பா.ஜ.க. வித்தியாசமான கட்சி என்று அழைக்கப்படுகிறது.
கர்நாடகாவில் 224 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில், ஆளும் கட்சியான பா.ஜ.க. நேற்று முன்தினம் எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் 189 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை வெளியிட்டது. 189 வேட்பாளர்களில் 52 பேர் புதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.