ஜூன்.3
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்று ஒரே நாளில் ஐந்து போட்டித் தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிட்டு அதிரடி காட்டியுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் கடந்த 2022 டிச.26-ம் தேதி ஜெயிலர் (ஆண், பெண்) பணிக்கான தேர்வும், மீன்துறை சார் ஆய்வாளர் தேர்வு கடந்த பிப்.7-ம் தேதியும் நடத்தப்பட்டது. இதேபோல், பொது சுகாதார பணியில் அடங்கிய சுகாதார அலுவலர் பணிக்கான தேர்வு பிப்ரவரி 13-ம் தேதியும், கல்லூரி கல்வி இயக்கக நிதியாளர் தேர்வு கடந்த மார்ச் 10-ம் தேதியும், இளநிலை மறுவாழ்வு அலுவலர் தேர்வு ஏப்.1-ம் தேதியும் நடத்தி முடிக்கப்பட்டது.
இந்நிலையில், வெவ்வேறு தேதிகளில் நடத்தி முடிக்கப்பட்ட இந்த 5 போட்டித் தேர்வுகளின் முடிவுகளையும் நேற்று ஒரே நாளில் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தத் தேர்வுகளின் அடுத்த நிலையான நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல், மதிப்பெண் மற்றும் தரவரிசை ஆகியவை டிஎன்பிஎஸ்சி இணையதளமான www.tnpsc.gov.in -ல் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வானர்களுக்கான நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு தேதி ஆகிய விவரங்களை இந்த இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அஜய் யாதவ் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.