ரஜினி,கமல், விஜய், அஜித் உள்ளிட்ட தமிழ் நடிகர்கள் , மூன்று வேடங்களில் நடித்துள்ளனர்.ஆனால் மூன்று படங்களில் மூன்று வேடத்தில் நடித்த ஒரே தமிழ் நடிகர், சிவாஜி மட்டுமே.
அவை :
1962 ஆம் ஆண்டு வெளிவந்த ‘பலே பாண்டியா’, ‘1969 ஆம் ஆண்டு ‘ரிலீஸ் ‘ஆன தெய்வமகன் மற்றும் 1979 ஆம் ஆண்டு வெளியான ‘திரிசூலம்’.
மூன்று படங்களுமே, சக்கைப்போடு போட்டவை.இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுபவை..
இந்த மூன்று படங்களில் ‘தெய்வமகன்’படத்துக்கு தனி சிறப்பு உண்டு. அந்தப்படம் ‘ஆஸ்கர்’ விருது வரை சென்றது.
இந்த படத்தை இயக்கியவர் ஏ.சி.திருலோகச்சந்தர். ‘தெய்வமகன்’அனுபவத்தை அவர் பகிர்ந்து கொள்கிறார்.
‘’ நான் சிவாஜியுடன் இணைந்து எத்தனையோ படங்களில் பணியாற்றினாலும், ‘தெய்வமகன்’ படத்தை மறக்க முடியாது. எப்பேர்ப்பட்ட நடிப்பு ?
அந்த படத்தை தொடங்குவதற்கான ஏற்பாடுகளில் முழு மூச்சாக ஈடுபட ஆரம்பித்தோம். முதலில் மூன்று வேடங்களில் நடிக்க வேண்டும் என்று சொன்னபோது, சிவாஜி அண்ணன் முகத்தில் லேசான தயக்கம். ரொம்பவும் யோசித்து சம்மதித்தார். வேடிக்கையாக ‘ மூன்று வேடங்களில் நடிக்க வேண்டும் என்றால் , மூன்று படங்களுக்கான கால்ஷீட் தர வேண்டும் – உங்களுக்கு கட்டுப்படியாகுமா? என சொன்னபோது என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
‘தெய்வமகன்’ எடுத்த போது, சிவாஜிக்கு நான் கொடுத்த தொல்லைகள் கொஞ்ச நஞ்சமல்ல- அவரை சித்ரவதை செய்தேன் என்று கூட சொல்லலாம்-சில நேரங்களில் என் மீது கோபித்துக்கொண்டு, முகத்தை ‘உர்’ரென வைத்துக்கொள்வார். ‘அண்ணே ‘ஷாட் ரெடி’ என்றதும், கோபத்தை குப்பையில் தூக்கி போட்டு விட்டு , ஷாட்டுக்கு தயாராகி விடுவார்.
முடிந்ததும் ‘திரிலோக்.’ஷாட்’ நல்லா வந்துருக்கா? என்று குழந்தை போல் கேட்பார். ‘ நான் எதுக்கு சொல்றேன்னா , படம் நல்லா வரணும்’என்பார். அவரது ஊடல் என்னை பெரிதும் கவர்ந்த விஷயம்.’என்றார், திருலோகச்சந்தர்.
——