ஓடிடி தளங்கள் விரட்டிய 165 தமிழ் படங்கள் !

ஜனவரி-04,

சினிமா படங்களை தியேட்டர்களில் மட்டுமே பார்க்க முடியும் என்ற நிலையை ஆரம்ப காலத்தில் வீடியோ கேசட்டுகள் இடம் மாற்றின. தூரதர்ஷன், அதன் தொடர்ச்சியாக தனியார் டிவிக்கள் முளைத்த பின்னர், அடுத்த பரினாமம் தொடங்கியது.

இப்போது ஓடிடி தளங்கள்.

கொரோனா காலத்தில்தான், ஓடிடி தளங்கள் குறித்து வெகு ஜனங்களுக்கு தெரிய வந்தது. பல சினிமா தயாரிப்பாளர்களுக்கும் அந்த நேரத்தில்தான் ஓடிடி தளங்களின் தாக்கம் தெரிய வந்தது என்பதே உண்மை.

பெரும் தொற்று காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டன.சிறிய, பெரிய சினிமாக்களை எடுத்து முடித்தவர்கள், படங்களை ரிலீஸ் செய்ய இயலாமல் தடுமாறினர்.அப்போது ஆபத்பாந்தவனாக கைகொடுத்தன ஓடிடி தளங்கள்.

திரை அரங்குகள் இல்லாததால், பொது மக்களும், சினிமா மற்றும் பொழுது போக்குக்கு ஓடிடி தளங்களை மொய்த்தனர்.

கொரோனா காலத்தில் பெரிய ஸ்டார்கள் படங்களோடு, விற்காமல் நீண்ட நாட்கள் பெட்டியில் தூங்கிய படங்களையும் ஓடிடி நிறுவனங்கள் வாங்கி வெளியிட்டன. அந்த சமயத்தில் கட்டுப்பாடு இல்லாமல், எல்லா படங்களையும் ஓடிடி நிறுவனங்கள் வாங்கி குவித்தன. தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபம் கிடைத்தது. ஓடிடி நிறுவனங்களும் லாபம் பார்த்தன.

பெரும் தொற்று ஓய்ந்து தியேட்டர்கள் திறக்கப்பட்ட பின், நல்ல கதை அம்சம் உள்ள படங்களை மட்டுமே ரசிகர்கள் ஓடிடியில் பார்த்தனர்.

தியேட்டர்கள் இல்லாவிட்டால் என்ன ? ஓடிடியில் விற்று விடலாம் என்ற எண்ணத்தில் கதை சரியாக இல்லாமல், திரைக்கதையில் கவனம் செலுத்தாமல், மேக்கிங்கில் சொதப்பிய படங்கள் தமிழில் உருவாக ஆரம்பித்தன. இந்த படங்களை ஓடிடி நிறுவனம் தடாலடியாக நிராகரித்துவிட்டது.

கடந்த ஆண்டு தமிழில் 241 படங்கள் வெளிவந்தன. தியேட்டர்களில் ஓடாத எந்த புதுமையும் இல்லாத படங்களை தயவு தாட்சணை பார்க்காமல் ஓடிடி நிறுவனங்கள் அதிரடியாக நிராகரித்தன. 165 படங்கள் வரை நிராகரித்த ஓடிடி நிறுவனங்கள் வெறும் 76 படங்களுக்கு மட்டுமே ஓகே சொல்லி வாங்கியுள்ளன.

அவ்வாறு வாங்கிய படங்களிலும், 28 படங்கள் இதுவரை ஓடிடியில் வெளியாகாமல் வெயிட்டிங் லிஸ்ட்டில் காத்திருக்கின்றன.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *