ஜுலை,12-
தனியார் தொலைக்காட்சிகளில் புதிய சினிமாக்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டபோது, தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் போர்க்குரல் எழுப்பினர்.
‘தியேட்டர்களில் படங்கள் வெளியாகி , 6 மாதங்கள் கழித்தே டிவிக்களில் ஒளிபரப்ப வேண்டும்’ என கெடு வைத்தனர். இந்த கோரிக்கையை, சில தயாரிப்பாளர்களே ஏற்கவில்லை. தியேட்டரில் வெளியாகி ஓடாத படங்களை நல்ல விலைக்கு தனியார் தொலைக்காட்சிகளுக்கு தயாரிப்பாளர்கள் விற்று காசு பார்த்தனர். ஒடாத அந்த படங்கள் சில நாட்களிலேயே டிவிக்களில் ஒளிபரப்பானது. தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் கூக்குரல், அதன் பின் ஒலிக்கவில்லை.
புதிய சினிமாக்களை ஒளிபரப்புவதில் இப்போது டிவிக்களோடு. ஓடிடி தளங்கள் போட்டா போட்டியில் ஈடுபட்டுள்ளன. கொரோனா காலத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டதால், ஓடிடி தளங்கள் சகட்டு மேனிக்கு புதிய படங்களை வாங்கி ஒளிபரப்பினர். தியேட்டரில் வெளியாகாத படங்களும் ஓடிடியில் ஒளிபரப்பாயின.
இந்த வியாபாரத்தில் தயாரிப்பாளர்களும், ஓடிடி தளங்களும் கணிசமாக காசு பார்த்தனர். இப்போது தியேட்டர்கள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ள நிலையிலும், ஓடிடி தளங்கள் புதிய சினிமாக்களை ஒளிபரப்பு செய்வதால், திரையரங்கு உரிமையாளர்கள் கொதிப்படைந்துள்ளனர். கடந்த காலத்தில் தொலைக்காட்சிகளுக்கு விதித்த நிபந்தனைகளை இப்போது ஓடிடி தளங்களுக்கு விதித்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் சென்னையில் ஆலோசனை நடத்தினர்.பின்னர் சங்க த்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் அளித்த பேட்டி இது:
ஓடிடியில் 4 வாரங்களில் புதிய திரைப்படங்களை வெளியிடுவதால் திரையரங்குகளுக்கு வரும் கூட்டம் குறைகிறது. எனவே புதிய சினிமாக்கள் ரிலீஸ் ஆகி 8 வாரங்கள் கழித்துத்தான் ஓடிடியில் திரையிட வேண்டும். இது குறித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.
ஓடிடியில் வெளியிடப்படும் திரைப்படங்கள், திரையரங்குகளில் வெளியிடப்படுவதால் தான்,அதற்கான விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதனால் அந்த படங்களுக்கு வரும் வசூலில் 10 சதவீத ராயல்டி தொகையை திரையரங்குகளுக்கு அளிக்க வேண்டும்’’. இது திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கை.
இங்குதான் இப்படி என்றால் ரூ 200 கோடி வசூலித்த மலையாளப் படமான 2018 தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் போதே ஓடிடியில் வெளியிட்டு விட்டார்கள். இதற்கு எதிராக கேரளாவில் இரண்டு நாள் திரையரங்குகளை மூடி எதிர்ப்பு தெரிவித்தனர்.
என்னதான் டி.வி., ஓ.டி.டி. என்று புதிய ஊடகங்கள் தோன்றினாலும் கூட தியேட்டர்கள் தான் சினிமா துறையின் முதுகெலும்பு என்பதை அனைத்து தரப்பும் உணரவேண்டும்,