தேர்தலில் பாஜகவை வீழ்த்த, பல மாதங்களுக்கு முன்பாகவே வரிந்து கட்டிக்கொண்டு செயல்பட்டவர், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்.இதன் தொடர்ச்சியாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மேற்கொண்ட முயற்சிகளால்26 எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு‘இந்தியா’எனும் வலிமையான கூட்டணியை கட்டமைத்துள்ளன.
இந்த கூட்டணி அமைய பிள்ளையார் சுழி போட்ட சரத்பவார் கட்சியை உடைத்து நொறுக்க, உக்கிரத்துடன் செயல்பட்ட பாஜக, தனது முயற்சியில் வெற்றி கண்டது.
சரத் அண்ணன் மகனும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான அஜித்பவார், பாஜக வலையில் வீழ்ந்தார். கணிசமான எம்.எல்.ஏ.க்களுடன் கட்சியில் இருந்து வெளியேறிய அஜித்பவாருக்கு மகாராஷ்டிர துணை முதலமைச்சர் பதவியை கொடுத்துள்ள பாஜக, சரத்பவாரையும் தங்கள் பக்கம் இழுக்க அனைத்து வித்தைகளையும் பயன்படுத்தி வருகிறது.
ஒரே ஒரு காரியத்தை மட்டும் செய்தால் ,அஜித்பவாரை,முதலமைச்சர் ஆக்குவதாக பாஜக மேலிடம் ஆசை காட்டியது.
என்ன காரியம்?
‘சரத்பவார் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் அல்லது பாஜக கூட்டணியில் இணைய வேண்டும். இந்த இரு காரியங்களில் ஏதாவது ஒன்றை நீங்கள் செய்து முடித்தால்,வெகுமதியாக உங்களுக்கு முதல்வர் பதவி தரப்படும்’ என, அஜித்பவாரிடம் பேரம் பேசியது பாஜக தலைமை.
இந்த விஷயம் குறித்து சித்தப்பா சரத்பவாரிடம் ஏற்கனவே ஒரு முறை அஜித் பேசினார். சரத் வளைந்து கொடுக்கவில்லை.இரண்டாவது முறையாக சனிக்கிழமை அன்று சரத்பவரை சந்தித்த அஜித்பவார்,பாஜக கோரிக்கையை ஏற்குமாறு வலியுறுத்தினார்.
ஆனால் பாஜக நிர்ப்பந்தத்துக்கு பணிய திட்டவட்டமாக மறுத்து விட்டார், சரத்பவார்.
தனக்கு பாஜக மறைமுகமாக மிரட்டல் விடுத்ததை செய்தியாளர்களிடம் பகிரங்கமாக போட்டு உடைத்து விட்டார் சரத்பவார்.
‘எனது அபிமானிகள் சிலர், பாஜகவுடன் கை கோர்க்குமாறு என்னை வலியுறுத்தினர்.நான் அவர்கள் பேச்சை காது கொடுத்து கேட்கவில்லை. எங்கள் கொள்கை வேறு.பாஜக கொள்கை வேறு. இது சரிப்பட்டு வராது என தெளிவாக சொல்லிவிட்டேன். பாஜகவுடன் கூட்டணி அமைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை’’ என சரத்பவார் மனம் திறந்தார்.
ரத்த சொந்தங்கள் மூலம் தூது விட்டும் சரத்பவார் பணியாததால், பாஜக மேலிடம் கவலை அடைந்துள்ளது.