ஓ.பன்னீர் செல்வமும் – டிடிவி. தினகரனும் இணைந்து செயல்படப்போவதாக அறிவித்து இருப்பது தமிழ்நாடு அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரே கட்சியாக இல்லாமல் ஒரே நோக்கத்துடன் செயல்பட இருப்பதாக அறிவித்துள்ளனர்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அடையாறில் உள்ள இல்லத்திற்குச் சென்று டிடிவி தினகரனை சந்தித்தார். இருவரும் சிறிது நேர சந்திப்புக்கு பின், கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய ஓ. பன்னீர்செல்வம், எப்போது சசிகலா மற்றும் டிடிவி தினகரனை சந்திக்க உள்ளீர்கள் என்றே இதுவரை பலரும் தன்னிடம் கேட்டதாகவும், இந்தச் சூழலில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்துள்ளதாகவும் கூறினார். சசிகலா வெளியூரில் இருப்பதால் வந்தவுடன் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஜெயலலிதா காலத்தில் அதிமுக எப்படி இருந்ததோ அதேபோன்ற அதிமுகவை நிச்சயம் உருவாக்குவோம் என்றும், எடப்பாடி சுயநலமாகச் செயல்பட்டு வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார். எம்ஜிஆர். ஜெயலலிதா காட்டிய வழியில் செயல்பட உள்ளதாகவும் அதற்கான முதல் படிதான் இது என்பதும் பன்னீர்செல்வத்தின் விளக்கம். சபரீசன் உடனான சந்திப்பு குறித்த கேள்விக்குப் பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், அது மரியாதை நிமிர்த்தமான சந்திப்பு மட்டுமே என்று கூறியுள்ளார்.
இதேபோல தங்களுக்குள் எந்த பகையும் இல்லை என்றும் சில காரணங்களால் பிரிந்திருந்ததாகவும் ஓபிஎஸ் உடனான சந்திப்புக்கு பிறகு டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார். உண்மையான அதிமுக தொண்டர்கள் கையில் கட்சியை ஒப்படைப்ப்பதே நோக்கம் என டிடிவி தினகரன் தெரிவித்தார். ஒரே கட்சியாக இல்லாமல் சி.பி.எம். – சி.பி.ஐ. கட்சிகளை போல செயல்படுவோம் என்று தினகரன் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது ஓ.பி.எஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் உடனிருந்தார்.