கட்சி சிதைவதை பார்ப்பதற்கு பதிலாக கண்ணியமாக தலைவர் பதவியை ராஜினாமா செய்ய சரத் பவார் நினைத்திருக்கலாம் என்று சிவ சேனாவின் (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) ஊதுகுழலான சாம்னா பத்திரிகையின் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை சரத் பவார் ராஜினாமா செய்தது தொடர்பாக, சிவ சேனாவின் (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) ஊதுகுழலான சாம்னா பத்திரிகையின் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் ராஜினாமா அத்தியாயம் திட்டமிட்ட நிகழ்வு மற்றும் அவர் முன்கூட்டியே தனது உரையை தயார் செய்துள்ளார். சரத் பவாரின் நெருங்கிய கூட்டாளிகளின் கூற்றுப்படி, அவர் உண்மையில் மகாராஷ்டிரா தினமான மே 1 அன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய திட்டமிட்டிருந்தார்.
ஆனால் மும்பையில் நடந்த வஞ்சித் பகுஜன் அகாடி கூட்டம் காரணமாக, மே 2ம் தேதியன்று சரத் பவார் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். சரத் பவார் ராஜினாமா செய்த பிறகு, அவரை சம்மதிக்க (தலைவராக தொடர) வைக்கும் முயற்சிகள் தொடங்கியது. இருப்பினும், கட்சியில் உள்ள அஜித் பவாரை பின்பற்றுபவர்களின் ஒரு கால் பா.ஜ.க.வில் உள்ளது. மேலும் கட்சி இவ்வாறு சிதைவதை பார்ப்பதற்கு பதிலாக கண்ணியத்துடன் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற எண்ணம் சரத் பவாருக்கு இருந்திருக்கலாம்.
எப்படியும் முதல்வராக வேண்டும் என்பதுதான் அஜித் பவாரின் நோக்கம். மக்களவை எம்.பி.யாக டெல்லியில் சுப்ரியா சுலே சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவது தனது தந்தையின் (சரத் பவார்) நிலையை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். எதிர்காலத்தில் கட்சியின் தலைமை பொறுப்பை அவர் பெற்றால், அவர் தந்தையின் அதே உயரத்தை அடைய முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.