கணவரை இழந்தப் பெண்ணை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும்.. உயர் நீதிமன்றம் அதிரடி.

ஆகஸ்டு, 04-

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் பொங்கியண்ணன். கோயில் பூசாரியான இவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். பொங்கியண்ணன்  மனைவி தங்கமணி .

விதவையான அவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில்,”ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுக்காவில் பெரிய கருப்பராயன் கோயில் உள்ளது. எனது கணவர் இந்த கோயிலில் பூசாரியாக இருந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு அவர் இறந்துவிட்டார்.

தற்போது, இந்த கோயிலில் ஆடி திருவிழா வரும் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடக்கிறது. இந்தத் திருவிழாவில் நானும் எனது மகனும் கலந்து கொள்ளவிருந்தோம். ஆனால் கோயில் நிர்வாகத்தினர் நான் கணவரை இழந்தவள் என்பதால் என்னை கோயிலுக்குள் வரக்கூடாது என்று தெரிவித்துள்ளனர்.

இதனால் நான் கோயிலுக்குள் செல்ல முடியவில்லை.கோயிலில் நுழைய, எனக்கும் என்னுடைய மகனுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று  கோரியிருந்தார். நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு,இந்த  மனு  விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, கணவரை இழந்தவர் என்பதால் கோயிலுக்குள் அனுமதி மறுப்பதா? என்று கேள்வி எழுப்பினார். ’.விதவை என்பதால் கோயிலில் நுழைய அனுமதி மறுப்பதை நாகரீக உலகில் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.விதவை கோயிலுக்குள் வந்தால், கோயிலின் புனிதம் கெட்டுப்போய்விடும் என்ற பழங்கால மூட நம்பிக்கை இன்னும் தொடருவது துரதிருஷ்டவசமானது.

இது போன்ற அர்த்தமற்ற நம்பிக்கைகளுக்கு எதிராக சீர்திருத்தவாதிகள் பலர் குரல் கொடுத்து வரும் போதிலும், இன்னும் பல கிராமங்களில் இது போன்ற நிகழ்வுகள் தொடர்கின்றன.ஒரு பெண் தனது கணவனை இழந்து விட்டார் என்பதால் அவருக்கான உரிமையை தடுக்க யாருக்கும் உரிமை கிடையாது.

நாம் சட்டத்தின் ஆட்சியில்  வசித்து வருகிறோம். மனுதாரர்,தனது மகனுடன் இரண்டு நாட்களும் கோயிலில்   நிம்மதியாக சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும். அவருக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்’’ என்பதும் நீதிபதியின் உத்தரவாகும்.

பழைமை காக்கும் பக்த சிகாமணிகள் அன்று என்ன செய்வார்களோ ?

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *