June 19, 23
கண்டங்களுக்கு இடையிலான கால்பந்து போட்டியில் இந்திய அணி லெபனானை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. கண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து போட்டி ஒடிசாவின் புவனேஷ்வரில் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடித்த இந்தியாவும், லெபனானும் நேற்று இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. ஒடிசாவின் புபனேஸ்வர், கலிங்கா மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் லெபனான் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபாரமாக வென்றது இந்திய அணி.
முதல் பாதியில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காமல் இருந்ததை அடுத்து, இரண்டாவது பாதியில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை பதிவு செய்து இந்திய அணி அசத்தியது. இதற்கு முன்னதாக 2018 ஆம் ஆண்டு இண்டர்காண்டினெண்டல் கோப்பை முதல் அத்தியாயத்தில் கென்யாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம் தரவரிசையில் 101-வது இடத்தில் இருந்து மீண்டும் டாப்-100 இடத்திற்குள் இந்திய அணி இடம்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கடைசியாக இந்திய அணி விளையாடிய 4 இறுதிப் போட்டிகளிலும் கோல் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் இந்திய கேப்டன் சுனில் சேத்ரி. அவர் SAFF சாம்பியன் 2015, இண்டர்காண்டினெண்டல் கோப்பை 2018, SAFF சாம்பியன் 2021, இண்டர்காண்டினெண்டல் கோப்பை 2023 4 போட்டிகளிலும் கோல் அடித்தது குறிப்பிடத்தக்கது.